தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”வெப்பச்சலனம் காரணமாக இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவாக கோயம்புத்தூர் சோலையார் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வரும் 20-ஆம் தேதி அன்று இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.