தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் இதுவரை வீட்டில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 91,851. 205 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 19,060. இதுவரை 5,016 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில், 621 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் டெல்லி சென்று திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்தோர் எண்ணிக்கை 48. மீதமுள்ள இருவர் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த 57 வயதுமிக்க பெண் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை பலியானார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது, யார்யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து கண்டறியப்பட்டு வருகிறது” என்றார்.