தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும் நடராஜர் வடிவம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்பட்டு வருகிறது.

இந்துமத சாஸ்திரங்களில் சிவபெருமானின் அடையாளமாக திருவாதிரை நட்சத்திரம் கருதப்படுகிறது.

மார்கழி மாதம் பவுர்ணமியோடு கூடி வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆடல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

அதன்படி, திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில், தியாகராஜ சுவாமி பாத தரிசனம் நடைபெற்றது. நேற்றிரவு மகா அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து,

இன்று அதிகாலையில், தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தின்போது, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நடராஜரை வழிபட்டனர்.

நெல்லையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி திருக்கோவிலில் அமைந்துள்ள தாமிரசபையில்,

இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீதாமிரசபையில் இருந்து நடராஜருக்கு நள்ளிரவு 1 மணியளவில் திருமஞ்சனம், அதிகாலை 3.30 மணியளவில் பசு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து, நடராஜருக்கு சிறப்பு நடன தீபாராதனையின்போது, ஓதுவா மூர்த்திகள் திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாடினர்.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நடராஜரை வழிபட்டனர்.