ஒட்டுக் கேட்பு விவகாரம்: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெகாசஸ் என்ற இத்தாலிய மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்கள், ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்டபலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஒன்றிய அரசு மீது புகார் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மோடி அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றன. மத்தியில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் இதுகுறித்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.

அதன்படி சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு காங்கிரசார் திரண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

பின்னர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, பெகாசஸ்  ஒட்டுக்கேட்பு விவகாரம் இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தி விட்டதாகவும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.