”தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனைகள் நிறுத்திவைப்பு”: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..

தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். தொற்று உறுதிசெய்யப்படுபவர்களில் 85% பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாவதாகவும், மீதமுள்ள 15% டெல்டாவாக உறுதியாவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். இதன்பின்னர் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அவர் பேசுகையில், “தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2,000 அளவில் அதிகமாகி வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோருக்கு மிதமான பாதிப்பு தான் இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம். வீட்டில் தனிமையில் இருப்பவர்கள், காலை – மாலை ஆகிய இரு வேளையும் பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்கு கீழ் ஆக்சிஜன் அளவு வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

சென்னையில் 26,000 பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் சுமார் 21,987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்க 178 மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை பிரதமர் மற்றும் முதல்வர் தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளனர். டெல்லியில் இருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நாளை மாலை 4-5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெறும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமை செயலகம் வர இருக்கிறார். 11 கல்லூரிகளில் 1,450 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை. தொற்று பாதிப்பில் 85% ஓமைக்ரானாகவும் 15% டெல்டாவாகவும் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தீவிரkhf ஆலோசித்து முடிவு எடுக்கிறார். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை.

பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாமை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.