ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத், கபில் சிபல்
மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத், கபில் சிபல்

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளதாவது:

ரபேல் விமானங்கள் வாங்கியது குறித்த தலைமை கணக்காளரின் அறிக்கை பொதுக்கணக்குக் குழு முன்பாகவும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளது. மேலும், தலைமைக் கணக்காளரின் (CAG) அறிக்கை இணையத்தில் அனைவரும் பார்க்கும் படியாக இடம்பெற்றிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. எங்கே இருக்கிறது? நீங்கள் யாராவது பாரத்தீர்களா… இத்தகைய பொய்யான தகவல்களை கூறி, உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் மீது காங்கிரஸ் பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் இதுபோன்ற விவகாரங்களை விசாரிப்பதற்கான விசாரணை அமைப்பல்ல. ரபேல் விவகாரத்தில் நடந்துள்ள தவறுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும். பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் அனைவரும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு சமன் அனுப்பி வரவழைத்து, ரபேல் தொடர்பான சிஏஜி அறிக்கையை எப்போது சமர்ப்பித்தீர்கள் எனக் கேட்க வேண்டும். இதனை அனைத்து உறுப்பினர்களிடமும் வலியுறுத்துவேன். முதலில் ரபேல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்காக மத்திய அரசு மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபலும் மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்தது ஏன் என பொதுக்கணக்குக் குழு, அரசு தலைமை வழக்கறிஞரை வரவழைத்து விசாரிக்க வேண்டும் என கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.