முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..

பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில்,

கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், திரு கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து விடுவார்கள்.

இந்தாண்டும், இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அதை முன்னிட்டு, திருவண்ணாமலையில், நாளை மறுநாள் 14ம் தேதி திரு கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிறகு நவம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, 22ம் தேதி திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது.

பிறகு 23ம் தேதி, காலை 4:00 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது.

அன்று மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்காக, 6 அடி உயரமுள்ள, ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மகா தீபம், 60 கி.மீ., துாரம் வரை பக்தர்களால் காண முடியும்.

தீபம் ஏற்றும் போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல வசதியாக, மேல் பாகம் மற்றும் கீழ் பாகத்தில்,தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 22ம் தேதி, மலை உச்சிக்கு, கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது.