துருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..


துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி சதி கவின் அதிகபட்சமான வாக்குகளைப் பெற்று அதிபர் முன்னணியில் இருப்பதாகக் கூறினார்.

பதிவான 99% ஓட்டுகளில் எர்டோகனின் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி 53 % வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், எர்டோகனை எதிர்த்துப் போட்டியிட்ட முகரம் இன்ஸின் மக்கள் குடியரசுக் கட்சி 31 % சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளதாகவும் துருக்கி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எங்களின் ஜனநாயகக் கடமையை தொடர்ந்து ஆற்றுவோம் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் நடத்திய ராணுவப் புரட்சியை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் எர்டோகன் வெற்றிகரமாக முறியடித்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் 265 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2,800 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று எர்டோகன் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை இருந்து வந்த நிலையில், 2019-ல் நடக்க வேண்டிய தேர்தலை, ஒரு ஆண்டு முன்னரே நடத்தி உத்தரவிட்டார் எர்டோகன். அதனைத் தொடர்ந்து தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றது.

முன்னதாக, துருக்கியில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்வரை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்தார். 91 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் உயரிய தலைவரான அதிபரை, பொதுமக்களே தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தேர்தலில் எர்டோகன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் துருக்கியின் அதிபராக எர்டோகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.