இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தடை

சென்னை அருகே அமைந்துள்ள மாதா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 41 பேர் கும்பலாக காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மாதா மருத்துவக் கல்லூரி 3 ஆண்டுகளுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி 2 ஆண்டுகளுக்கு தங்கள் வளாகங்களில் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த தண்டலத்தில் அமைந்துள்ள மாதா மருத்துவக் கல்லூரியில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர், மூன்றாமாண்டு மாணவர் ஒருவர், இறுதியாண்டு மாணவர்கள் 15 பேர் என 41 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வறைகளில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக, ரகசிய புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் மாதா மருத்துவக் கல்லூரி தேர்வறை வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த விசாரணைக் குழு தேர்வறையில் மாணவர்கள் விருப்பத்திற்கு அங்கும் இங்கும் சென்று வருவதும், புத்தகங்களையும், பிட்டுகளையும், விடைத் தாள்களையும் பகிர்ந்து கொண்டது பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது.

சில மாணவர்கள் தேர்வு தொடங்கிய பிறகு வெளியே சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்துள்ளனர்.

மாணவர்கள் கும்பலாக காப்பியடித்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இந்த 41 மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த 41 மாணவர்களும் அதே தேர்வுகளை மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எழுத வேண்டும்.

மேலும் மாதா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த முடியாது. தேர்வு ஒழுங்குமுறைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி தேர்வறை வீடியோ பதிவை ஆய்வு செய்ததில், தேர்வறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு முறைகேடாக உதவி செய்தது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் என்பது உயிர் காக்கும் துறையாக உள்ள நிலையில், மருத்துவ தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவது எதிர்காலத்தில் அப்பாவிகளின் உயிர்களோடு விளையாடும் விபரீத விளையாட்டாக முடியும் என்பதை மாணவர்களும், சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும்.