உ.பியில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டம் தொழிலாளர்கள் அதிர்ச்சி..

உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நடைபயணமாயாகவே சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்ற பலர் பசியாலும், விபத்துகளாலும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச அரசு தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

யோகி ஆதித்யநாத்தின் அரசு, அடுத்த மூன்று வருடங்களுக்கு உ.பி-யில் தொழிலாளர் சட்டம் செயல்படாது என்று அவசர சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூடி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் தொழிற்சங்க சட்டங்கள், போராடும் உரிமைக்கான சட்டங்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள்,

தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்கள் உள்ளிட்ட 38 தொழிலாளர் சட்டங்களுக்கு அங்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அடிப்படை ஊதியம் சட்டம் 1936, தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் 1932, பாண்ட் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் 1976, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996 ஆகிய நான்கு சட்டங்கள் மட்டும் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று அமலாகும்.

உ.பி அரசின் இந்த அறிவிப்பால் அம்மாநில ஊழியர்கள் தங்கள் உரிமையை இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இதனால் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழிலாளர் சட்ட வழக்கறிஞர் ராமபிரியா கோபாலகிருஷ்ணன், “இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது.

உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர் உரிமைகளை 100 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கிறது.

இந்தச் சட்டங்களை விலக்குவது தொழிலாளர்கள் அடிமையாகும் நிலைக்கு வழிவகுக்கும். அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலான இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.” எனக் கூறியுள்ளார்.