முக்கிய செய்திகள்

வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்!

வாழ்நாளில், எத்தனையோ பிரம்மாண்ட மலர்மாலைகளையும், மகுடங்களையும் சூடிக் களித்தவர் கலைஞர். ஆனால், அவரது இறதிப் பயணத்தின் போது, ஊடக உலகின் “சொல்லின் செல்வன்” ஆகத் திகழும் புதியதலைமுறையின் மூத்த தொகுப்பாளரான வெங்கடப் பிரகாஷ், தனது முத்தான தமிழால், பின்னி அணிவித்த பெரும்புகழ்ப் பேராரம் தமிழ்ப் பார்வையாளர்கள் அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது எனலாம். கலைஞர் எனும் பெருங்காப்பியத்தை, தனது கூரிய சொல்லுளி கொண்டு செதுக்கி, செதுக்கி, தமிழ்ச் சமூகத்தின் அடிமனத்தில் அழிக்க முடியாத கல்லாவணமாகவே வடித்து விட்டார் வெங்கடப் பிரகாஷ். வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு, சொற் கோட்டம் கட்டி விட்டார் சொல்லின் செல்வன் வெங்கடப் பிரகாஷ்.. உணர்வுகள் பீறிட்டு கொப்பளித்த அந்தத் தருணத்தில் தன் நெஞ்சில் உதித்து நாவின் வழியாக அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டிய தமிழை, நல்ல வேளையாக பத்திரப்படுத்தி இருக்கிறார் வெங்கடப் பிரகாஷ். இதோ கலைஞருக்கு தான் எழுப்பிய சொற்கோட்டத்திற்குள், அவரே நம்மை அழைத்துச் செல்கிறார்…     

 

அன்பர்களே!

கலைஞர் மறைந்த நாளன்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட மறுநாளன்றும் நேரலையில் நான் அமர நேரிட்டது! இயன்றவரை நன்றிக்கடன் தீர்ப்போமென்று வெறுங்கையுடன் அமர்ந்திருந்தேன். 

சொற்களைத் தவிர வேறொன்றுமில்லை என்னிடத்தில்! அம்மையாரோ கலைஞரோ தமிழகத்து ஆளுமைகள் விண்ணெட்டும்போது இப்படி விடைதருவதே தமிழ்மாநிலத்தின் மாண்பெனக் கொண்டேன்!

உரைநடையில் உச்சந்தொட்டவரிடம் இச்சையால் பிச்சைபெற்ற ஒருவனின் எளிய நன்றியறிதல்தாம் இவ்வரிகள்! இவற்றில் ஒரு பாதியே அன்றரற்றியது! மொத்தமுஞ் சேர்த்துப் பொதுவில் வைத்துவிட்டேன். பொதிந்த அன்பை மட்டுமே கொள்வீர்! பிழை பொறுத்தருள்வீர்!

தமிழாசிரியரான என் தந்தையார் எப்பொழுதும் மேடையில் பேசுமுன் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரையும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரையும் நினைத்துக்கொள்வேன் என்பார். நான் எந்தையோடு எப்போதும் கலைஞரை நெஞ்சிலேற்றித் தமிழூறிய பெரியப்பா வைகோ
அவர்களையும் எப்போதும் கலைஞரை நேர்மையாக எதிர்த்தே நிற்கும் தமிழ்க்கடல் பெரியப்பா நெல்லை கண்ணன் அவர்களையும் நினைத்துக்கொண்டேன்.

நன்றி – புதியதலைமுறைக்கு

ஆகஸ்ட் 7, 2018 மாலையில் கலைஞர் மறைந்தார் என்ற செய்திவந்தபோது…

எவரும் விரும்பாத, இதயத்தைக் கனக்க வைக்கும் அந்த
இரக்கமற்ற செய்தியைத்தான் நாம் இப்போது கேள்விப்படுகிறோம்.
கலைஞர் சற்றுமுன் 6.10 மணியளவில் காலமானாரென்று
காவேரி மருத்துவமனை அறிவித்துவிட்டது.

கோடானுகோடித் தொண்டர்களை அழவைத்துவிட்டு இப்படியெல்லாம் அஸ்தமிப்பது உதயசூரியனுக்கு அழகல்லவே!

அதிக அளவாக அரைநாள் மட்டுந்தானே அதற்கு அனுமதி! நிரந்தரமாய்க் கண்மூட சூரியப்பூவிற்கேது அனுமதி!? இருளின் கொடுமை சூரியனுக்கெப்படித் தெரியும்!?

கடந்த பத்துநாட்களுக்கும் மேலாகக் காவேரி மருத்துவமனையில் கடுமையாகப் போராடிவிட்டு இறுதியாகத் தன்னை வெல்லப் புன்னகையுடன் அனுமதித்திருக்கிறார் இயற்கையை!

ஏறத்தாழ ஒருநூற்றாண்டு காலம் தமிழ் உலகிற்குத் தொண்டாற்றியவர் தொண்டாற்றலைத் தொண்டர்களுக்குத் தோள்மாற்றித் தந்துவிட்டு விடைபெற்றிருக்கிறார்.

மக்களின் இழிவு நீங்க உழைத்த தலைவர் உறங்கச் செல்கிறார்.

இந்தியாவின் முதுபெருந்தலைவர்களுள் முத்தானவர் முதிர்ந்தபழமாய் உதிர்ந்துவிட்டார்.

தலைவா எழுந்து வா என்று முழங்கினர் தொண்டர்கள். உங்களில் ஒருவனாக இனிக் கலந்தெழுந்து வருவேன் என்று விடைபெற்றுவிட்டார்.

குழந்தைகளும் முதியவர்களும் அனைவருக்கும் சொத்தானவர்கள்.தமிழக்குடும்பத்தின் மூத்த முத்துச்சொத்து கரைந்துவிட்டது.

தொல்காப்பியப் பூங்காவில் தானுமோர் மலராக மலர்ந்துவிட்டார் மகத்தான கலைஞர்!

மையூற உம் எழுதுகோலும் கண்ணூற நாங்களும் காத்திருந்தோம்!

வருவாய் வருவாய் என நாங்கள் நினைத்திருந்தோம் வந்தது வந்தாய் பேழையில் வந்தாயே எம் தலைவா! 
எனத் தொண்டர்கள் கதறுகின்றனர்.

நன்னீர் பொங்கக் காவிரி கரைபுரண்டு காவிரி தீரத்துக் கலைமகன் உனைக்காண வந்திருக்குங் காலமதில், 
காவேரியிலிருந்து உப்புநீர்க் கடலோரம் உறங்கச் செல்கிறேன் என்கிறாயே ! 
அடுக்குமாவென அரற்றுகின்றனர் அன்பர்கள்!

மருத்துவமனை வாயிலில் மருகும் தொண்டர் கூட்டம் 
பெருக்கும் முழக்கங்கள் விண்ணை உடைக்கின்றன

எதிரிகளையும் கண்ணீர்வடிக்கச் செய்யும் வல்லமைபெற்ற 
இத்திருமகன் வாழ்ந்த வாழ்வுக்குக் கிடைத்த பொற்கிழிகள் இவை!

மழைவெள்ளம் எட்டிப்பார்த்ததுண்டு கோபாலபுரத்தில் அன்று!
கண்ணீர்வெள்ளம் எட்டக் கண்டோம் அதேபுரத்தில் இன்று!

தமிழகத்தின் எத்தனையோ புரங்களைப் போல் 
தானுமொரு புரமல்ல கோபாலபுரம்!
தமிழகத்தின் அகத்தை மாற்றிய புதுமைப்புரம் தன்னிகரற்ற கோபாலபுரம்!
கோடானு கோடித் தொண்டர்களைப் பலபத்தாண்டுகளாகக்
கண்குளிரக் கண்டபுரம் கோபாலபுரம்!

தமிழகத்தின் பல பெருங்கோவில்கள் கண்ட பக்தர்களின் எண்ணிக்கையை விட இக்கோபாலபுரம் கண்ட பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை அதிகம்!

’என் கலைஞர்’ என்கிறார் உச்ச விண்மீன்!
’எழுந்து வாங்கப்பா’ என்கிறார் உதடுதுடிக்கும் பெண்!
எத்தனையெத்தனைபேர் இப்படி எந்தையே என அழைக்கும் விந்தை செய்தாய்!

காற்சட்டைப் பருவந்தொட்டுக் காலமுடிவு வரை 
கன்னிநிலத்திற்குத் தொண்டாற்றிய ஒரு பெருந்தலைவனை
மீண்டுவா மீண்டுவா என்று அழைத்தழைத்து நாத்தழுதழுத்துத்
தொண்டையெல்லாம் வற்றிக் கிடக்கின்றனர் தொண்டர்கள்!
உரம்பெற்ற உடன்பிறப்புகள் அழுவதற்கும் குரலின்றி 
உடலங்களாய் மூச்சடங்கிப் பேச்சடங்கி நிற்கின்றனர்!

(தொலைபேசி இணைப்பில் வந்து இரங்கல்களைத் தெரிவித்த தலைவர்கள்:
பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.திருநாவுக்கரசர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன்
அதிமுக செய்தித் தொடர்பாளர் திரு.வைகைச் செல்வன்
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன்
திராவிடர்கழகத் தலைவர் திரு.கி.வீரமணி
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு.தொல்.திருமாவளவன்

அரங்கிற்கு வந்து தம் நினைவஞ்சலிகளைப் பகிர்ந்தவர்கள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் திரு.சி.மகேந்திரன்
மூத்த இதழாளர் திரு.துக்ளக் ரமேஷ்
மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் ஆகியோர்

சி.மகேந்திரன் அவர்கள் கலைஞரைத் தொட்டுத் தன் கல்லூரிக் கால நினைவுகளையும், அன்றைய சாணிப்பால் சவுக்கடிக் கொடூரங்களையும் விவரித்தார்.

துக்ளக் ரமேஷ் அவர்களிடம் ‘’காலமெலாம் நீங்களும் உங்கள் குருநாதரும் கலைஞரை விமர்சித்தே வந்தவர்கள்.அவரிடம் போற்றத்தகுந்தவற்றை நீங்கள் சொல்லக் காத்திருக்கிறேன் ‘’ என்றேன். கலைஞர் என்ற அரசியல்தலைவரைப் பற்றியும் இதழாசிரியரைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
அருணகிரிநாதரிடம் ‘’ கலைஞர் உங்களுக்கு அளிக்கும் மனமார்ந்த மதிப்பை நானும் அளிக்க விரும்புகிறேன் ’’ என்று சந்நிதானம் என்றே விளித்தேன்.

’’திருஞானசம்பந்தரால் புதுப்பிக்கப்பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ மடத்தின் ஆதீனகர்த்தர் நீங்கள். உங்களையும் உடன் வைத்திருப்பார். இன்னொருபுறம் வைணவர்கள் சூழவும் இருப்பார். ஒரு முறை திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் ஒருபுறம் திரு.திருச்சி கல்யாணராமன் – வைணவரான இவர் காஞ்சி சங்கரமடத்தின் ஆஸ்தானப் பொழிவாளரும்கூட- அவர்கள் மற்றொருபுறம் என வீற்றிருந்தனர். நடுநாயகமாய்க் கலைஞர் வீற்றிருந்தார்.அக்கூட்டத்தில் அவர்கள் பேச்சை இரசித்துக்கேட்டார் கலைஞர்.இத்தனை நாள் கேட்காமல் போனேனே என்று போற்றினார்.பேசிய அவர்களும் மகிழ்ந்தனர்.நாத்திகம் பேசியவர் இவ்வளவு நயம்படப் புகழ்ந்ததெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டது?’’ என்று கேட்டேன்.


’ ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்று தொடங்கியதிலேயே பதிலைப் பொதிந்துவைத்துவிட்டார் ஆதீனகர்த்தர்.

துக்ளக் ரமேஷ் அவர்கள் இவர்களோடு மட்டுமல்லாமல் பிற மதத்தினரோடும் கலைஞர் அப்படியே உறவைப் பேணினார் என்றார். 
செய்தியாளர் வேதவள்ளியும் உடனமர்ந்து செய்திகளை வழங்கினார் )

ஆகஸ்ட் 8: கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நாளன்று நேரலை:
இராஜாஜி அரங்கில்:

முதுபெருந்தலைவர் முத்தமிழறிஞர் கண்ணாடிப்பேழைக்குள் கண்ணுறங்குகிறார்.

நேசித்தோர் நிறைவஞ்சலிக்காய்க் கலைஞர் வீற்றிருக்கிறார் இதோ இராஜாஜி அரங்கில். 
கண்ணுக்கெட்டும் தொலைவில் சிலையாய்ப் பெரியார். 
அடுத்து நிற்கிறார் அண்ணா. 
சாலையாய்த் தொடர்கிறார் கர்மவீரர். 
இப்படி மனம் நிறைந்த தலைவர்களின் வழியில் மாகலைஞர் பயணிக்கவிருக்கிறார்.

தன் வாழ்வில் எப்போதும் எதிர்நீச்சலையே போட்டு வந்தவர் இதோ இப்போதும் மக்கள் வெள்ளத்தில் எதிர்நீச்சல்போட்டே முன்னேறுகிறார்.

அண்ணாவின் அடிநிழல் தேடிச் செல்கிறார். 
அழைக்கும் அண்ணாவா? தடுக்கும் தம்பிமார்களா? பார்த்துவிடலாமென்று மல்லுக்கு நிற்கின்றனர்!

தேசியக்கொடி போர்த்தப்பட்டு இராணுவ மரியாதையுடன் தன் இறுதிப்பயணத்தை மேற்கொள்ளும் இத்தலைவர், அடிமை இந்தியாவில் திருக்குவளை எனும் கண்விழிக்காததொரு குறுங்கிராமத்தில் கண்விழித்தவர் என்றால் எவர் நம்புவார்!

இராஜாஜி அரங்கிற்கும் மெரினா கடற்கரைக்குமான தொலைவு இன்று மட்டும் பல்லாயிரம் கல்லாகக் கனத்த மலைப்பாம்பாய் நீள்கிறது.

கண்ணாடிப்பெட்டியில் கம்பீரக்குரலோன் கண்ணுறங்குகிறார்.
கருப்புக் கண்ணாடியில் நெருப்புக் குரலோன் கடற்கரையை நோக்குகிறார்.

காலப் பேழைக்குள் கருவானவராய்
வரலாற்றில் வீற்றிருக்க விரைகிறார்.

இதோ மேற்கிலும் கிழக்கிலுமென
இன்று மட்டும் இரு சூரியன்கள் சாய்ந்துவிட்டன!

இராஜாஜியிடம் விடைபெற்றார். பெரியாரிடம் விடைபெற்றார். இதோ சாலையாய் விரிந்து தம்பியைத் தழுவுகிறார் அண்ணா!

போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என மறித்துக் கைகாட்டவென்று சிலம்பு சொல்லுமே அதைப்போல

கருப்பு சிவப்பு வண்ணக் கொடிகள் 
காற்றைக் கிழிக்கும் வண்ணம் அலைக்கழிந்து 
திருக்கொண்ட தலைவா, விடம் தந்து செல்லாதே திரும்பாவிடமது எனும் சேதி சொல்கின்றன!

தொண்டர்தம் கண்ணுதிரங் கொட்டிக் கொட்டித் 
திசைகெட்டாடும் கொடியெங்கும் சிவப்பெனும் ஒருநிறந்தானென்று ஆகாதா!

கட்டுக்குள் அடங்காமல் விழிநீரோட, வெறிகொண்டு 
கழகக்கொடிகளைக் காற்றில் ஏவும் தொண்டர்களைக் காணுங்கள்!

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் 
விசனக் கூட்டமல்ல இக்கூட்டம்
வான்புகழ் இதயதேவனை வீரவணக்கத்தோடனுப்பும் கூட்டமிது!

எத்திசை நோக்கினும் ஏக்கப் பெருங்குரல்!
ஏந்தலே எழுந்துவந்துவிடு எனும் கட்டளைக்குரல்!

’ஓய்வறியாது உழைத்தவன் இதோ இங்கே ஓய்வெடுக்கிறான்’
என்று ஏன் எழுதச் சொன்னீர்! எவரறிவித்தார் உமக்கு ஓய்வை!

அண்ணாவின் இதயக் கமலத்தை அவரிடத்தே சேர்ப்பிக்க
அவர்தம் வார்ப்படமே! அவர்தம் காலடி நோக்கிப் புறப்பட்டீரோ!

காடுவரை மட்டுமா எங்களுக்குக் 
கடைசி வரையும் நீதானென்று இருந்தோமே! 
இருந்தார்போன்று இல்லையென்று ஆனாயே!
இதயத்தளபதிகளின் கண்களையும் கிழித்தனையே!

ஏழுகோடிக் குடிகளின் ஏந்தலாய்
இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தாய்!
வாழ்வாங்கு வாழுங்கோன் இவனென்று இனித்திருந்தாய்!
வாழ்வெஞ்சி இனியிருப்போர் தவிக்கவா நினைத்திருந்தாய்!

கோலோச்சியோர் கொலுவிருக்குமிடமாய்க் கடற்கரை ஆயிற்றே!
கண்ணயர்ந்தோரே! ஈழம் பார்க்காமல் ஈமம் பார்ப்பதென்றாயிற்றே!

கடற்கரைச்சாலையை காமராசர் சாலையென்று ஆக்கியவர் நீரன்றோ! கண்ணீர் பெருகக்
கர்மவீரரும் தம் கரங்களால் தழுவியேந்தி அனுப்புகிறார் உமையின்று!

எந்தக் காமராசர் சாலையில் மந்திரிமார்கள் புடைசூழ நாளும் கோட்டைக்குச் சென்று வந்தாரோ 
அதே சாலையில் இனித் திரும்பாவிடத்திற்குச் செல்லப் பிடிவாதங் காட்டுகிறார்!

காமராசருக்கு என்ன செய்தார் கலைஞர் என்று நேற்றுப்பெய்த மழையில் முளைத்த காளான்கள் பிதற்றுகின்றன.
கட்சி அலுவலகத்திலேயே காமராசருக்குக் கடமையாற்ற அவர்கள் நினைத்தபோது மறுத்து இராஜாஜி அரங்கில் மக்கள் பார்வைக்கு மாமனிதரை வைத்தார்.

அவர் வணங்கும் காந்தியின் இராட்டைச் சத்தத்தில் அவருறங்க அனைவர் சித்தச் சம்மதமும் பெற்றுத் தலையில் தலைப்பாகையோடுத் தானுமிறங்கி அவ்விடத்தைத் தகுதியாக்கிடக் களங்கண்டவர்.

வரலாற்றை வலைத்தளங்களின் சிற்றலைகளில் தேடாதீர்கள் இளைஞர்களே! 
புத்தகப் பேரலைகளில் வாசித்தறியுங்கள் எம் அன்புச் செல்வங்களே!

தமிழ் மெய்நிகர் பல்கலை அமைத்தீரே!
தமிழர் மெய்நிகர் பல்கலை வித்தகரே!

நானென்று நவிலாதே இதழ்களொற்ற நாமென்றுரை
நலமென்றும் சூழுமென்று நயம்பட உரைத்தீரே!

மாற்றாரும் மனங்குளிரப் புகழும் மாசற்ற மாந்தநேயப் பெருந்தகையே! தந்தீரே மாற்றுத்திறனெனும் மாசற்ற பதத்தை!

மறைந்திருப்பது வாழ்நாளெலாம் பகுத்தறிவை உயர்த்திப்பிடித்த தலைவர்.
குறைந்திராத உழைப்பினால் காலமெலாம் கடமையாற்றிய தலைவர்!

மரணமென்ற ஒன்றையும் பாசமென்ற மற்றொன்றையும் ஒருசேர
மடையரன்றோ படைத்தார்! இயற்கையெனும் திருப்பெயரால்!
செல்வத்தலைவர் செல்லுமிந்நேரத்தில் சிதைந்த உள்ளங்கள்
சொல்வதொன்றே! சிதைக்குமியற்கையே! நீயாயினுமிரு நலமோடு!

கதறல் சத்தம் காதைப் பிளக்கிறது!
இராஜாஜி மறைந்தார்! பெரியார் ‘இராசகோவாலு போய்ட்டியா!’ என்று ஈமம் வரை சென்று கண்ணீர் உகுத்தார்.
அண்ணா மறைந்தபோதும் அவ்வாறே தம்பிமார் உகுத்தனர். கர்மவீரர் மறைந்தபோதும் அப்படித்தான் உருகியது கழகமே!

என்னதான் பகுத்தறிவில் புடம்போட்டாலும் பாசத்தில் கதறுதல் மனித இயல்பல்லவா! 
துஞ்சியவர் உடலங் கண்டால் நேசித்தவர் நெஞ்சத்து அன்பெல்லாம் கண்கள்வழிக் கொட்டதா!

ஒரு மனிதர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மறைவில்தான் தெரிந்துகொள்ளலாமென்றால் 
இதோ காணுங்கள் எவ்வளவு புகழ்பெற்றவர் புகழுடலோடு போகின்றாரென்று!

தேடிச்சோறுநிதந்தின்று – பல 
சின்னஞ்சிறுகதைகள்பேசி – மனம்
வாடித்துன்பமிகஉழன்று – பிறர் 
வாடப்பலசெயல்கள்செய்து – நரை 
கூடிக்கிழப்பருவமெய்தி – கொடுங் 
கூற்றுக்கிரையெனப்பின்மாயும் – பலவேடிக்கைமனிதரைப்போலே
வாழ்ந்தவரல்லர் கலைஞர்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்!

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறளாய்த் தோற்றங்கொண்டவர்

முந்தி வாழ்த்திய அத்தெய்வப் புலவருக்கு ஜல 
சந்தியில் வானுயரச் சிலை சமைத்தவர். 
கோனாய்த் தானிருக்கையில் 
கோட்டம் அமைத்தவர்!

நாமெலாம் நெஞ்சு நிமிர்த்தக் காரணமான பெருமக்கள் வரிசையில்
நங்கூரமாய்ச் செம்மாந்து நின்று நிலைபெற்றுவிட்டவர் போகிறார்!

எத்தகு இனப்பகையை எங்கிருந்து வந்தவர் ஊடறுத்து வென்றார்
என்ற வரலாற்றை இங்கிருக்கும் பிள்ளைகள் இனிப்பயில்வர்!

நகரமுடியாமல் நகர்கிறது நற்றமிழ்ப் புதல்வரின் நகர்வலம்!
நகரமுடிவிற்கல்ல! திருமுடிசூட நடப்பது போல் போகிறது ஊர்வலம்!

வங்கக் கடலும் நாணி நிற்கும்படி
பக்கக் கடலாய் மனிதக் கூட்டம் அலையடிக்கிறது!
கழுகுப்பார்வையில் அதைக் காண்கையில் 
தங்கத் தலைவருக்குப் பெருகும்படை விரிந்தே செல்கிறது!

(அரங்கில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன் அவர்களும் இராசி அழகப்பன் அவர்களும் தங்கள் இதய அஞ்சலிகளைச் செலுத்தினர். அழகப்பன் அவர்கள் கவியாய்ப் பொழிந்தார். முத்துராமன் அவர்கள் தம் தம்பி சுப.வீரபாண்டியனாருக்கும் தமக்கும் தம் தந்தைக்கும் கலைஞரோடு உள்ள நெருக்கத்தை உருக்கமாகப் பகிர்ந்தார். உடல்நலம் குன்றியிருந்த அவர் தந்தை, கலைஞர் அரியணை ஏறியதில் நலம்பெற்றார் என்றார். அதனால்தான் அவர் டாக்டர் கலைஞரோ!? என்றேன். பின் தொடர்ந்தேன்…

கலைஞரும் இலக்கியமும் என்று நான் எழுதிவைத்திருந்த ஆக்கமொன்றை இடையிடையே எடுத்துவைத்தேன். பின்னிணைப்பாய் இங்கும் தந்திருக்கிறேன். )

காவேரி கைவிரிக்கக் கடுந்துயரில் மூழ்கடிக்கப்
போகாத இடந்தேடிப் பொன்னுடலாய்ப் புகுந்துவிட்டார்!

ஆயுளுக்கும் தன் நாவால் அண்ணா அண்ணா என்றுரைத்தார்
அவர்காலடிக்கே நிழல்தேடித் தஞ்சமென்று ஏகுகிறார்!

பரிதவித்த மாந்தரை மீட்டபின்னே 
பள்ளத்தில் இனி எவருமில்லையெனப்
பிள்ளைக்கும் சொல்லிவிட்டுப்
படுத்துறங்கச் சென்றுவிட்டார்!

இந்நேரமெல்லாம் கடற்கரை மணல் குளிர்மணலாய்த் தணிந்திருக்குமே! இன்றோ சுடுமணலாய்த் தகித்திருக்கிறதே!
சூரியனைப் புதைத்தால் சுடத்தானே செய்யும்!

உமக்குமோர்க் குடும்பமுண்டு என்றன்றோ நினைத்திருந்தோம்!
உம்மகவே உமக்குத் தொண்டரேயென்று இன்றன்றோ கண்டோம்!
ஆவியுகுத்தபின்தான் அவரே கோருகிறார் அப்பாவென்றழைக்க!
ஆதியும் நடுங்குதய்யா உன்னகத்தோர் கண்களில் நீர்பார்க்க!
நீர் பார்க்க இனியில்லை என்றானதும் எங்கண்ணில்
நீர் தடுக்க ஒருவருமில்லை என்றானதே!

வாழ்நாளெலாம் வைரநெஞ்சினராய்த் தொண்டர்தம் தோள்தடவி உலவித் திரிந்த ஒருபெருந் தலைவர் திரும்பி வாராத ஊர்பார்க்கப் பயணிக்கிறார்!

ஈர நெஞ்சங்கொண்ட இயற்கை அன்னையும் தன் கண்ணீர்
சொரிய வேளைபார்த்து மேகக்கண்களை மூடியே வைத்திருக்கிறாள் 
(நல்லடக்கம் முடிந்ததும் எவருக்கும் இடையூறின்றிக் கொட்டியது மழை!)

நாளைய தமிழகம் தலைவரின் கரங்களில் பத்திரப்படுமென
நம்பி ஏமாந்த மாந்தர்தம் தொண்டை வற்றிப் போயினரே!

உமக்கு எதிரிகள்தாம் அதிகமென்று நினைத்திருந்தோம்!
உம் எதிரிகளின் அகங்களிலும் நீரேயெனக் கண்டுகொண்டோம்!
சென்றுவாவென அவர்களும் துடைக்கின்றனர் கண்ணோரத்தை!
இன்றுதான் அவர்களே தடவுகின்றனர் இதயத்தை!

காற்று வாங்க இனிக் கடற்கரைக்கு வரும் கூட்டத்தைவிட
கலைஞர் நினைவை வாங்க வரும் கூட்டமே மிஞ்சும்!

கோபாலபுரம் போன்றே கடற்கரையும் இனி ஆகும்
கண்கொண்டு நினைத்த மாத்திரத்தில் கலைஞரைக் காணுமிடமென்று!

வெண்தாடித் தடியின் தொண்டரடிப்பொடி
புற்று முற்றுவைத்த பேரறிஞரின் பக்குவத்தம்பி
உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியேறிவிட்டார்!

முத்தமிழ் அறிஞருக்கு முப்படை அணிவகுப்போடு இறுதிமரியாதை!
நாடுபோற்றும் தலைவர்களும் கூடிநின்ற உறவுகளும் குவிந்துவிழுந்த தொண்டர்களும் கூப்பிய கரங்களோடு நிற்க
குண்டுகள் முழங்கக் காவலர் கண்களும் கலங்க 
மண்ணதிர மனமதிரப் பெருமரமொன்று விதையென்றானதே!

இருக்கும் தலைவர்களையெல்லாம் எடுத்துக்கொடுத்துவிட்டால்
விடியுமா விடியாதாவென எவர் முகம்பார்ப்பது இனி!?

தன்னை வழியனுப்பும் பணியளித்துப் பிள்ளைச் செய்தியாளன்
எனைப் பணித்தமூத்த முத்தமிழ்ச் செய்தியாளருக்கு விடைதர விழிநீர்ப்பெருக்கத்தால் விம்மி வேண்டி
வள்ளல் பெருமானைத் துணைக்கழைத்து நிற்கிறேனே!

வான்கலந்த கலைஞரே! நின் வாசகத்தை 
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்குதய்யா!

(ஒரு தலைவராக அவரை நினைத்தது வரை என் நா தழுதழுக்கவில்லை. வீரவணக்கஞ் செலுத்தும் திண்மைதான் கொண்டிருந்தேன்.

என் துறை மூத்தவர் என நொடிப்பொழுதில் நினைத்த மாத்திரத்தில் என்னுறுதி குலைந்து ஈரவணக்கஞ் செலுத்தி வடிந்தேன்!)

பெரியார் என்ன மறைந்தா விட்டார்?
ஓமந்தூரார் என்ன மறைந்தா விட்டார்?
கர்மவீரர் என்ன மறைந்தா விட்டார்?
அண்ணா என்ன மறைந்தா விட்டார்?
கலைஞரும் என்ன மறைந்தா விட்டார்?

எவரேனும் நம்பினால்தானே நீவிர் மறைந்தாகக் கணக்கு!
பிணக்குள்ளோரே நம்பவில்லையெனும்போது ஏது மறைவு!?

உறங்கட்டும் சற்றே அவர் உறங்கட்டும்
உடன்பிறப்புகளின் உள்ளங்களுக்குள்
உறங்கட்டும் அவர் சற்றே உறங்கட்டும்

எதற்கும் அவர் எழுதுகோலிடம் சொல்லிவையுங்கள்!
எழுத்துமை காயுமுன் எழுந்துவிடும் வல்லமையுண்டு அவர்க்கென்று!

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

வள்ளுவனைத் துணைக்கழைத்தாலன்றி நாம் அமைதி கொள்வது இயலாது.

இதே கடற்கரையில் நில்லுங்கள்
நாளைச் சூரியன் காலைச் சூரியனாய்
எழுகிறானென்றால் அவன் வழக்கச் சூரியனல்லன்
தமிழனை விழிக்கச் செய்த முழக்கச் சூரியன் என்று காண்க!
கலைஞரே கதிரவனாய்க் கிழக்குதித்தாரென்று கண்ணாரக் காண்க!

கலைஞருக்குப் புதியதலைமுறையின் இதய அஞ்சலிகள் என்றும் உரித்தாகட்டும்.

பிற்சேர்க்கை:

இலக்கியமும் கலைஞரும்

இலக்கியத்திற்கு வரையறை என்று பல ஆளுமைகள் பலவற்றை வரைந்திருக்கின்றனர். அவற்றில் விஞ்சி நிற்பது எளிய மக்களையும் எப்படைப்பு ஆட்கொண்டு அவர்களை மேம்படுத்துகிறதோ அதுவே இலக்கியம் என்பது. அவ்வகையில் முத்தமிழ் அறிஞர் என்பதும் கலைஞர் என்பதும் திமுக தலைவருக்குச் சாலப்பொருந்தும் பட்டங்கள்!
ஞானக்கூத்தன், வண்ணதாசன், கலாப்ரியா, வைரமுத்து, வாலி, அப்துல்ரஹ்மான் என்று அவரது இலக்கியப் பங்களிப்பைப் போற்றியவர்கள் ஏராளம். க.நா.சுவிலிருந்து இன்று வரை விமர்சித்தவர்களும் உண்டு என்றாலும் மிகை நாடி மிக்க கொளல் எனில் போற்றலே அதிகம்.

இலக்கியமென்றால் என்ன என்று தன்னளவிலேனும் ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதே இலக்கியவாதியின் தன்மை என்றால் கலைஞருக்கும் அப்படியோர் நிலைப்பாடிருந்தது. 
நவீன இலக்கியத்தைப்பொறுத்த மட்டிலும் கலைஞருக்கு அதன் மீது பெரிய மதிப்பில்லை என்றே சொல்லவேண்டும். பல ஆண்டுகளுக்குமுன் சுபமங்களா இதழுக்கு அவரளித்த நேர்காணலில் சொல்கிறார் ‘ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதப்படும் எழுத்துகளை நான் வரவேற்பவன் அல்லன். அதைத்தானே நவீன இலக்கியம் என்று சொல்கிறீர்கள்? அதன் மீது மதிப்பில்லை’ என்றார். எனில் அவரது பயணம் எப்படியிருந்தது? வாழ்நாளெல்லாம் எழுதுவதும் பேசுவதும் நற்றமிழில் அழகுததும்பும் சொற்கோவையோடுதான் என்ற நிலைப்பாட்டிலேயே இயங்கியவர் கலைஞர். 

இளம் பள்ளிப்பருவத்தில் எழுதிய எழுத்துகளாகட்டும் பின் இயக்க இதழ்களில் எழுதியதாகட்டும் நாடகங்களில் எழுதியதாகட்டும் திரைப்படங்களில் எழுதியதாகட்டும் தனித்த கடிதங்களில் எழுதியதாகட்டும் வாழ்வை வடித்து எழுதியதாகட்டும் உரையெழுதியதாகட்டும் மொழிபெயர்த்து எழுதியதாகட்டும் புதினங்கள் எழுதியதாகட்டும் கவிமேடைகளில் இயக்கமேடைகளில் ஆற்றிய உரைகளாகட்டும் அத்தனையும் தேன்சொட்டும் தீஞ்சுவைத் தமிழில் மக்கள் கொண்டாடிய இலக்கியங்கள்தாம். அவரது எழுதுகோல்வழிப் பிறந்த படைப்புகள் இலக்கிய வரிசையில் என்றும் தனித்து நிற்கும். கலைஞரின் எழுத்துகளிலிருந்து சொட்டிய மையே பலரது எழுதுகோல்களை நிரப்பின.

1956 இல் தமது 32 ஆம் வயதிலேயே குறளோவியம் படைத்தவர் கலைஞர். வேலூர் திராவிடன் பதிப்பகத்தின் வெளியீடாக முதலில் வந்தது. ‘ கலைஞர் கண்கொண்டு குறளைக் காண்பது தமிழைத் துய்ப்பார்க்கே இணையிலா இன்பமும் பெரும் பயனும் நல்கும்.’ என்பது திராவிடன் பதிப்பகத்தாரின் புகழ்மாலை. பின் முரசொலி, தினமணிக்கதிர், குங்குமம் போன்ற இதழ்களில் குறளோவியத்தைக் கதைகளாக, வாழ்க்கை நிகழ்வுகளாக, தமிழக வரலாற்றுப் பதிவுகளாக மிக எளிமையாகவும், அழகாகவும், ஆழமாகவும் வரைந்திருக்கிறார். அதன் கோப்பாக 300 குறளோவியங்கள் 1985 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த நூலாக வெளிவந்தது. அண்ணாமலைப் பலகலைக்கழகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின் இந்தியிலும்கூட மொழிபெயர்க்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராய் வீற்றிருந்தபோது வெளிவந்த புதினம் ரோமாபுரிப்பாண்டியன். ஆயிரம் அரசியல் அழுத்தங்களுக்கிடையில் இவரால் எப்படித்தான் எழுத முடிகிறதோ என்று அனைவரும் வியந்தனர். முதலில் முரசொலியிலும் பின்னர் குமுதம் இதழிலும் தொடராக வந்தது ரோமாபுரிப்பாண்டியன். தமிழக வரலாற்றை ரோம் நாட்டு அகஸ்டஸ் கால வரலாற்றோடு இணைக்கும் முயற்சியில் படைக்கப்பெற்றது இப்புதினம். வணிகத் தொடர்பால் இரு நாட்டின் உறவு பெருகியதைப் பல இலக்கியச் சான்றுகள் , தங்க நாணயங்கள், புதைபொருள் சான்றுகள் உறுதிசெய்யும் நிலையில் கிமு20 ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு பயணிக்கும் நாவல் இது. நாவலெங்கும் அக்கால நாகரிகம், ஆடை அணிகலன்கள், சமூகப் பொருளாதார நிலை என அனைத்தின் மூலமாக நாம் அக்காலத்தையே உணர்ந்துகொள்ளுமளவிற்குப் படைத்திருப்பார். மேலும் மதுரையும் அதன் துறைமுகமான கொற்கையும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். கொற்கை முத்துக்களாலான அணிகலன்களாக முத்துக்கடுக்கண், முத்துக்கண்டி, முத்துச்சல்லி போன்றவற்றையும் முத்துக்களாலான மருந்துப்பொருட்களான முத்துக்கற்கம், முத்துச் சுண்ணம் போன்றவற்றையும் மணப்பந்தலில் தூவக்கூடியது முத்து மணலென்றும் நுணுக்கமாக விவரித்திருப்பார்.’’ நாங்கள் வாள் பிடித்துப் பழகியவர்களே தவிர தாள் பிடித்துப் பழகவில்லை’’ என்பது போன்ற வீரஞ்செறிந்த உரையாடற்காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவர் எடுத்துவைக்கும் ஒப்புவமைகள் வியந்து ரசிக்கவைப்பவை. பனம் பழம் போன்ற கறுத்த மேனி, குன்றுகள் போன்ற மதில்கள், அத்திக்காய் நிறம், நட்டுவாக்காலி மீசை, களிற்றின் வயிறு போல நிலைக்கதவுகள், கொன்றைக்காய் விரல்கள், வற்றிய பீர்க்கங்காய் போன்ற உடல் போன்றவை சில உதாரணங்கள். 

நூல் வெளியீட்டிற்குத் தலைமை தாங்கியவர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். வெளியிட்டவர் தலைமை நீதிபதி அனந்த நாராயணன். பெற்றுக்கொண்டது கவியரசர் கண்ணதாசன்.
2014 ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாயிற்று.

1970 களின் இறுதிப்பகுதியில் கலைஞரின் அரசியல் அல்லாத இலக்கிய மணம் மட்டுமே கமழும் உரைகள் தொகுக்கப்பட்டு மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. 
அந்நூலில் 1969 இல் ஆற்றிய உரைகளிலிருந்து கம்பர்விழா உரை, கூழாங்கல்லை வைரமாக்குவோம், ஏழையின் சிரிப்பில் ஆகிய உரைகள்
1971 இல் மலர்க்காட்சி, இளங்கோவடிகள் எனும் தலைப்பில் இரு உரைகள், பத்திரிகைப் பெண்ணே ஆகிய உரைகள்
1972 இல் வசதியுள்ளோர் வழிவிடுக, கலைவாணர், நாடக தாசர், வள்ளலார் வழி எது?, இருமொழி போதும், தமிழிசை இயக்கம், இராசராசன் சிலை, கப்பலோட்டிய தமிழன், இதயங்கள் இயந்திரங்கள் ஆகவேண்டாம், புனித தோமையர், மனப்புரட்சி தேவை ஆகிய உரைகள்…

1973 இல் அலகாபாத் மாநாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர், இளங்கோவடிகள் எனும் தலைப்பில் மேலும் இரு உரைகள், நிலாமுற்றம், வள்ளுவர்க்கோர் ஆலயம், உமாமகேஸ்வரனார், இலக்குவனார், பாரதி விழா, பயிற்றுமொழி ஆகிய உரைகளும்…

1974 இல் கம்பர் விழா, கலை வளர்ப்போம், மொழிமானம் பெறுவோம், கருத்துச்சுதந்திரம் ஆகிய உரைகளும் தொகுக்கப்பட்டிருந்தன.

1987 இல் வெளிவந்தது சங்கத்தமிழ் எனும் நூல். இந்நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு விளக்கக் கவிதைகளைப் புதுக்கவிதைகளாகப் படைத்திருப்பார். இறுதியில் நின்ற 11 பாடல்களில் ஒருதலைக்காதல் எனும் பெயரில் கற்பனை கலந்த குறுங்காவியமாகப் பொருத்தமான சங்க இலக்கியப் பாடல்களுடன் எழுதியுள்ளார். இந்த விளக்கப் பாடல்கள் முதலில் குங்குமம் இதழில் வாரம் ஒரு பாடல் என வெளியாகி பின்னர் நூல் வடிவம்பெற்றுப் பலபதிப்புகளைக் கண்டுவருகிறது.

1991 ஆம் ஆண்டுவாக்கில் வெளிவந்தது பாயும் புலி பண்டாரக வன்னியன் எனும் கலைஞரின் எழுச்சி மிக்க வரலாற்றுப்புதினம். அதில் அவர் படைத்த பண்டாரக வன்னியனும் அவன் உள்ளங்கவர்க் காதலி குருவிச்சி நாச்சியாரும் அவன் அருமைத் தங்கையர் நல்ல நாச்சியும் ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். அதன் இறுதியில் கலைஞர் குறிப்பிடுகிறார் ’காட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட – அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு! என்று! நாம் கண்ணால் கண்ட ஈழத்து உணர்ச்சிக்குத் தன்னால் இயன்ற அளவு உரமாக இருந்தவர் கலைஞர்.

1985 காலகட்டத்தில் கொங்குவட்டாரத்தில் வழிவழியாகக் குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த இருவர் பொன்னரும் சங்கரும். அவர்களைப் பற்றிய கதையே அண்ணன்மார் சாமி கதை என்றும் குன்றுடையான் கதை என்றும் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் கதையை கவிஞர் சக்திகனல் என்பாரின் நூல் மற்றும் அவரது தந்தை ஏட்டுப்பிரதியிலிருந்து எடுத்துவைத்த குறிப்புகள், பூளவாடி பொன்னுச்சாமி பாடிய உடுக்கையடிப் பாடல் என அனைத்தையும் உள்வாங்கி பொன்னர்-சங்கர் எனும் தலைப்பிலேயே தொடர்கதையாக எழுதினார். பின்னர் அது நூலாக 1985 காலகட்டத்தில் ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. பின் 2011 இல் கலைஞரின் கதை வசனத்தில் பொன்னர் சங்கர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. 

பிறந்தது முதல் மறைந்தது வரை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால வாழ்வு முழுவதிலும் நற்றமிழாலேயே நாடு சுற்றி வரலாறு படைத்த திறம்பெற்றவராய்த் திகழ்ந்த கலைஞர் தம் வாழ்வையும் ஆறு தொகுதிகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார். தம்முடைய அரசியல்வாழ்வு, பொதுவாழ்வு, சொந்த வாழ்வு என அனைத்தையும் நெஞ்சுக்கு நீதியாய்ப் படைத்திருக்கிறார்.

முதல் பகுதி தினமணிக்கதிர் இதழில் தொடராக வெளியானது. அதில் 1924 ஆம் ஆண்டு அவர் திருக்குவளையில் பிறந்ததிலிருந்து 1969 இல் அவர் தமிழகத்தின் முதல்வரானது வரையிலான நிகழ்வுகளைச் சுவைபடக் கூறியிருக்கிறார். 1975 இல் முதல் பகுதி நூலாக வெளிவந்தது.

இரண்டாவது பகுதி குங்குமம் இதழில் தொடராக வெளியாயிற்று. 1969 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரையிலான நிகழ்வுகள் இதில் வருகின்றன. 1987 இல் இரண்டாம் பகுதி நூலாக வெளிவந்தது.
மூன்றாம் பகுதி 1976 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டுவரையிலான நிகழ்வுகளைக் கொண்டதாக மலர்ந்தது. 1997 இல் வெளியானது இம்மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி 1989 முதல் 1996 வரையிலான நிகழ்வுகளை விவரித்தது. 2003 ஆம் ஆண்டு இந்த நான்காம் பகுதி வெளியாயிற்று.

ஐந்தாம் பகுதி 1996 முதல் 1999 வரையிலான காலகட்டத்தை விவரிக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் 2013 ஜூன் 2 ஆம் நாள் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. ச.மோகன் தலைமை தாங்க முதல் நூலைப் பேராசிரியர் மா.நன்னன் பெற்றுக்கொண்டார்.
ஆறாம் பகுதி 1999 முதல் 2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் நாள் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி P.R.கோகுல கிருஷ்ணன் வெளியிட கவிஞர் வைரமுத்து முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

கலைஞரின் மற்றுமொரு புகழ் வாய்ந்த படைப்பு தொல்காப்பியப் பூங்கா. தொல்காப்பியரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் என அறுவரைச் சொல்வர். அதற்குப் பின்னும் பலர் எழுதியிருக்கின்றனர் என்றாலும் அவர்களுள் காலத்திற்கேற்ற புதுமைக் கருத்துகளைக் கையாண்டு, வரலாற்றுக்குறிப்புகளை ஆங்காங்கு தந்து விளக்கிய தனிச்சிறப்பு கலைஞரைச் சேரும். மனிதர்கள் உள் நுழைய முடியாத அடர்ந்த காடு என்றே மக்கள் தள்ளி நின்ற காலத்தில் அது காடன்று கவின் மலர்கள் மலர்ந்து மணங்கமழும் பூங்கா என்று நிறுவியர் கலைஞர். தொல்காப்பிய உரைகள், தொல்காப்பியம் குறித்து வெளிவந்திருந்த ஆய்வு நூல்கள் என்று அனைத்தையும் ஆழ்ந்து கருத்திற்கொண்டு, அகரமுதலிகள் போன்ற பிற ஆதாரங்களையும் கொண்டு இந்நூலை ஆக்கியிருக்கிறார் கலைஞர். பேராசிரியர் க.அன்பழகன் இந்நூலைப் பாராட்டுகையில் கடின ஆக்கங்கள் அனைத்தையும் உள்வாங்கி, மக்கள் படிக்க விரும்பும் எளிய நடையில், படிப்போர் ஆர்வத்தைத் தூண்டி, நினைவில் நிறுத்தத்தக்க வகையில் வரலாற்றுச் செய்திகளோடு இப்பூங்கா படைக்கப்பட்டிருக்கிறது என்றார். அது சற்றும் மிகையில்லை என்பதைப் படிப்போர் உணரலாம்.

திருக்குறளுக்கு தருமர், மணக்குடவர், தாமதத்தர், நச்சர், பருதி,பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய பதின்மர் பழைய உரையாசிரியர்கள். இவ்வரிசையில் திரு.வி.க., கா.சு.பிள்ளை, மு.வரதராஜன், வ.சுப.மாணிக்கம், கி.வா.ஜ., பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆகியோரிலிருந்து சுஜாதா வரை பலர் உரைகளை எழுதியுள்ளனர். சிற்றுரை, பேருரை, தெளிவரை, கருத்துரை, குறிப்புரை, ஆய்வுரை என்று 360க்கும் அதிகமான உரைகள் வெளிவந்துள்ளன. இத்தனை உரைகளுக்கும் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் உரையாகக் கலைஞரின் உரை வெளிவந்து தனித்துவத்தோடு என்றும் நிலைத்திருக்கும் தன்மையோடு திகழ்கிறது. முரசொலியில் தொடர்ந்து எழுதப்பட்டுவந்த இந்த உரை 1996 இல் திருக்குறள்- கலைஞர் உரை என்ற பெயரில் நூலாயிற்று.

தென்பாண்டிச் சிங்கம். இது கலைஞர் எழுதிய மற்றுமோர் வரலாற்றுப் புதினம். இதன் முதற் பதிப்பு 1983 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. இதன் நாயகர் வாளுக்கு வேலி என்பார். 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப்போரிட்டவர். மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலியின் படைகள் மருதுபாண்டியர்களுக்குப் போரில் பெரிதும் உதவியதை வைத்து வடிக்கப்பட்ட புதினம் இது. இப்புதினம் தென்பாண்டிச் சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகைத் தொலைக்காட்சியில் வெளியானது. 

சிலப்பதிகாரக் காட்சிகளையும் அகநானூற்றுக் காட்சிகளையும் புறநானூற்றுக் காட்சிகளையும் அவர் வடித்ததை இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒரு புறம் வரலாற்றுப்புதினங்கள் மறுபுறம் மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், நச்சுக்கோப்பை என்று சமூக நாடகங்களின் வரிசை 

இன்னொருபுறம் தாய் காவியம் உட்பட விளக்கவுரைகளாய் அமைந்த படைப்புகள் என்று எப்புறமும் வார்ப்பித்த நூல்களனைத்தும் அவரது வளம்பெற்ற நடையால் புகழ்பெற்றன.

இராஜகுமாரியிலிருந்து பொன்னர் சங்கர் வரை பலப்பல திரைப்பட ஆக்கங்கள் அவற்றில் பல படங்களுக்கு அவரது எழுதிய பாடல்கள் என்று மக்களிடம் சென்று சேர்ந்துகொண்டிருந்தார். இத்தனைக்கும் மேலாக வயது முதிர்ந்த நிலையிலும்கூட தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களுக்கும் எழுதிவந்தார். 
குறிப்பாக இராமானுஜர் தொடரைச் சொல்லவேண்டும்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன்
புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன்
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமநுசன் 
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோமவன் நாமங்களே 
என்று வைணவர்கள் கொண்டாடும் சமயாச்சாரியார் இராமனுஜர். குருநாதராகத் திருக்கச்சி நம்பியைக் கொண்டது, திருவரங்கம் கோவிலுக்குள் துலுக்க நாச்சியாரை எழுந்தருளச் செய்வித்தது திருக்கோட்டியூரார் அருளிச்செய்து தான் அறிந்தவற்றை நரகமே கிடைப்பினும் பரவாயில்லை என்று அனைவர்க்கும் அறிவிக்கும் ஆசையோடு மதிலேறியதுவரை புரட்சி மலர்களால் பூசிக்கப்படவேண்டியவர் இராமானுஜர் என்று தன் கைவண்ணத்தில் காட்டினார். ஆத்திகரும் ஆரத்தழுவி நின்றனர் ஆதவனை!

இவ்வளவு எழுதிக்குவித்த கலைஞர் பேரறிஞரைப் போன்றோ நாவலரைப் போன்றோ பேராசிரியரைப் போன்றோ கல்லூரியில் சென்று பட்டம் பெற்றவரல்லர் பள்ளியோடு முடித்துக்கொண்டு பிறர்க்குப் பல்கலையாய் நின்ற பேருழைப்புக்குச் சொந்தக்காரர்

கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையே இளைப்பாறும் இடமாக எப்போதும் கலைஞர் கருதுவது இலக்கியத்தைத்தான். முதல்வராக இருந்த நேரங்களிலும் கூட கவியரங்கங்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் ஆர்வத்தையும் கொண்டிருந்தது அந்த இளைப்பாறுதலுக்காகத்தான்.

இன்றும் அந்த எழுதுகோல் கலைஞரின் கரம் சிந்தை கசிந்து தன்னை ஏந்திக்கொள்ளாதாவென ஏக்கங்கொண்டு மைசிந்தக் காத்திருக்கிறது.

எவரொருவரும் ஓய்வில்தான் எழுதிக்குவிப்பார்கள் அல்லது எழுத்தையே முழுநேர வாழ்வெனக் கொள்வார்கள். கலைஞரோ அரசியல் இலக்கியம் என இரண்டையுமே முழுநேரமெனக் கொண்டவர். இவர் வடித்த படைப்புகளை ஒரு சுவைஞர் முழுதும் உணர்ந்து சுவைக்கவே ஓர் ஆயுள் வேண்டும் என்றால் அவர் எத்தகு பயன்மிகு வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். காலத்தில் உறைந்துவிடும் தன்மை பெற்றதல்ல கலைஞரின் படைப்புகள். காலந்தோறும் கற்போர் மேல் அருவியெனப் பொழிந்து புத்துணர்வூட்டும் புனல். காவிரி தீரத்துக் கலைமகனைத் தமிழகம் தனதென்று கொண்டது வரலாறு வாரிக்கொடுத்த கொடை. இப்படியோர் கலைஞர் இனி எப்போது பிறப்பார்?

 
புதியதலைமுறைக்காக வேங்கடப்பிரகாஷ்

நன்றி – புதியதலைமுறைக்கு

Venkata Prakash’s Sorkottam for Kalaingar