முக்கிய செய்திகள்

தமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்

 

வேலை நிமித்தமாக நாட்டிற்குள் தங்கு தடையின்றி நடமாடுவதும், புலம்பெயர்வதும் அதிகரித்து இருக்கிறது என்கிறது 2016-17 பொருளாதார ஆய்வறிக்கை.

பிழைப்புக்காக இடம்பெயரும் மாநிலத்தவர்களில் உ.பி, பீகார், ம.பி முதல் 3 இடங்களில் உள்ளது. இவர்களுக்கு வேலை தரும் மாநிலங்களில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளது.

1991-01 வரை சராசரி புலம்பெயர் மக்கள் விகிதம் 2.4%. 2001-11ல் இது 4.5% என இருமடங்காகியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உழைக்கும் படையில் 10.5% புலம்பெயர்ந்தவர்கள். 2000க்குப்பின் வேலைசார் புலம்பெயர்வு ஆண்டுக்கு 5-9 கோடியாக கிடுகிடுத்துள்ளது.

வளர்ந்த மாநிலம், முன்னோடி மாடல் என பீத்திக்கொள்ளும் குஜராத்திலிருந்து மட்டும் தமிழ்நாட்டுக்கு, 7 லட்சம் பேர் சராசரியாக பிழைப்புத் தேடி வருகிறார்கள்.

இன தேசிய அரசியல் பார்வையில் மிகுந்த எச்சரிக்கையுடனும், அதேநேரம் மிகுந்த மனிதாபிமானத்தோடு, சக மனிதனின் வாழ்வுக்கான கரிசணையோடும் இந்த விவகாரத்தை அணுகவேண்டியிருக்கிறது.

வளரும் முதலாளித்துவத்தில் இது தவிர்க்கவே முடியாதது. உலகம் முழுவதும் இன்றைக்கு அரசியலில் புலப்பெயர்ச்சி பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், வளப்பங்கீடு போன்றவை அதிமுக்கிய காரணிகளாக உள்ளன.

ஒருபக்கம் இந்த புலம்பெயர்வு புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சாட்சியாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டின் கலாச்சார சுதந்திரம், அடிமட்டத்தொழிலுக்காக அதிகமானோர் வருவதால் அரசின் மீதான கூடுதல் சுமை, நீர் உள்ளிட்ட அடிப்படையான இயற்கை வளப்பங்கீடு போன்றவற்றில் கடும் சிக்கல் எழுகிறது.

இன்னொருபுறம் திருப்பூர் போன்ற தொழில்மாநாகரங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர் குடி அமர்வதால் வாக்குரிமை பெற்று, தமிழ்நாட்டு அரசியலையே தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக மாறுகின்றனர். தமிழ்நாடு என்று இல்லை; எந்த மாநிலத்திலும் இது மிகமோசமான விளைவைத் தரும்.

பல்லாண்டுகாலமாக, இங்கேயே வசிப்பவர்கள், அல்லது நிரந்தர குடிகளாக உருவாகும் வெளிமாநிலத்தவர் கூட பிரச்னை இல்லை. ஆனால், திடீரென கொத்துக்கொத்தாக உள்ளே வரும் பிற மாநிலத்தவர், தேர்தல் ஒட்டிய காலத்தில் வாக்கிவங்கியாக மாறுவது பேரபாயம்.

உண்மையில், நம்மிடம் இத்தகைய புலம்பெயர் குடி அமர்வுகள், புலம்பெயர் வாக்குவங்கிகள் குறித்த முறையான எந்தத்தகவலும் கிடையாது.

இன்னொருபக்கம் மத்திய அரசின் தமிழ்நாட்டு வேலைகள் வடமாநிலத்தவருக்கு வழங்கப்படுகிறது.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குரலாக இன தேசிய நலன்களை சித்தரிக்கும் போக்கு நமக்கு பழக்கமானது. ஆனால், முன்பு அக்குரல்கள் எழுப்பப்பட்ட நேரத்தில் இடதுசாரி தமிழ்த்தேசியமும், முற்போக்கு அடையாளமும் நம்மிடம் இருந்தன. இன்று அப்படியல்ல.

உலகம் முழுக்க வலதுசாரி தேசியம் வலுத்துள்ளது. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கோஷம் ஒரு ட்ரம்பை உருவாக்கியுள்ளது.

புலம்பெயர்தல் அதிகரிப்பதால் நாளை ஐரோப்பிய ஒன்றியத்தன வழி புலப்பெயர்ச்சி, பிரிட்டனை தனித்து செல்லவும் தூண்டும் அளவுக்கு செல்வம்கொழிக்கும் உலகின் வல்லாண்மை நாடுகளிலேயே புலப்பெயர்ச்சி முக்கியமான விவதமாகியுள்ளது.

NRC என்கிற பெயரில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக நடத்திவரும் அதகளம் இனதேசிய அரசியலை இந்துத்துவம் காவு வாங்கத் துடிக்கும் எச்சரிக்கை மணி. தமிழ்நாட்டிலும் வலதுசாரி தேசியக்குரல்கள் இன தேசிய அரசியல் பங்காளிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

எனவே, மாநிலங்களுக்கு இடையிலான புலப்பெயர்வு விதிகளை தெளிவாக வரையறுப்பதே எதிர்கால இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றது. இன தேசிய நலன்களை வலதுசாரி தேசியத்துக்கு பலியாகிவிடாமல் தவிர்க்கவும் அதுதான் வழி.

இல்லையென்றால் வலது தீவிரவாத உணர்வுகள் நம் சமூக பொருளாதார லட்சியங்களை காவுகொடுக்க வேண்டியிருக்கும்.

– விவேக் கணநாதனின் முகநூல் பதிவில் இருந்து…