உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மேற்கு இந்தியதீவுகள் அணி..

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை முன்னாள் சாம்பியன் மேற்கு இந்தியதீவுகள் அணி இழந்தது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கு இந்தியதீவுகள் , ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த சூப்பர் 6 தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மேற்கு இந்தியதீவுகள் – ஸ்காட்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மேற்கு இந்தியதீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சார்லஸ் 0 ர, கிங் 22 ரன், அடுத்து களம் இறங்கிய புரூக்ஸ் 0 ரன், ஹோப் 13 ரன், மேயர்ஸ் 5 ரன், பூரன் 21 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர், ஷெப்பர்ட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.

இதில் ஹோல்டர் 45 ரன்னிலும், ஷெப்பர்ட் 36 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ்டோபர் மெக்பிரைட், மேத்யூ க்ராஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கிறிஸ்டோபர் மெக்பிரைட் 0 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பிரண்டன் மெக்முல்லன் 69 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து களம் இறங்கிய ஜார்ஜ் முன்சே 18 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து மேத்யூ க்ராஸ் உடன் ரிச்சி பெர்ரிங்டன் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதே வேளையில் தோல்வி அடைந்த மேற்கு மேற்கு இந்தியதீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது.