முக்கிய செய்திகள்

மரபணுமாற்ற விதைகள் : நாகசாகி – ஹிரோஷிமா, போபால் விஷவாயுவைப்போல் மற்றுமொரு பேரழிவை உருவாக்கலாம்!

மருத்துவர் சிவராமன் நேர்காணல்

dr.sivaraman(குழந்தைகள் உரிமை அமைப்பின் “முன்னணி” இதழுக்காக கடந்த 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல்)

        __________________________________________

இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் இவ்வளவு பரவலாக விவாதிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு, மரபணுமாற்ற விதைகள், மக்கள் அரங்கில் பொது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. மத்திய மரபணு தொழில் நுட்ப அனுமதிக்குழு (GEAC) அனுமதி வழங்கிய பின்னரும், நேரடியாக அதனை நடைமுறைப் படுத்தாமல், கடந்த ஜவரிமாதம் 13ம் தேதிமுதல்,  மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது குறிப்பிடத் தக்கது. இந்திய மருத்துவம், இயற்கை வேளாண்மை, மரபார்ந்த பயிர்கள் மற்றும் தாவர உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் மருத்துவர் சிவராமன், மரபணு மாற்ற விதைகள் குறித்த பல்வேறு கருத்துகளை, முன்னணிக்காக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மரபணுமாற்ற விதைகள் தொடர்பான விவாதங்கள் உச்சக்கட்டத்தை எட்டிஇருக்கும் நிலையில்,  அதனை மேலும் கூர்மைப்படுத்த இந்த நேர்காணல் உதவும் என்று நம்புகிறோம்.

__________________________________

கேள்வி : மரபணுமாற்றம் என்பது, அறிவியல் வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அம்சம் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது அதனை ஏன் இயற்கை ஆர்வலர்கள் எதிர்க்க வேண்டும்?

பதில் : இயற்கைக்கு ஆதரவானவர்கள் அனைவரும் அறிவியலுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு தவறான கருத்து தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இது வருத்தத்துக்கு உரியது. உண்மையில் சொல்லப்போனால்,  இயற்கை ஆர்வலர்கள் மட்டுமே அறிவியலை முழுமையாக புரிந்து கொண்டு அணுகுபவர்கள். பென்சில் பேனாவில் இருந்து அணு ஆயுதம் வரைக்கும் அறிவியலின் விளைவுகள் தான். ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு அல்லது மாற்றம் என்பது சாமான்ய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே, அதனை வரவேற்கவோ எதிர்க்கவோ முடியும்.genetic modified genetic mod 1

மரபணுமாற்ற விதைகளைப் பொறுத்தவரை, அது ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்தின் சந்தைத் தேவைக்காக நிகழ்த்தப்பட்டு வரும் அறிவியல் ஜாலம் என்பதை மனச்சாட்சி உள்ள யாராலும் மறுக்க முடியாது. அறிவியல் ஆய்வுகளும், வளர்ச்சியும் சாமான்ய மக்களின் வாழ்வை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அவர்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது. அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் இந்த மரபணு மாற்ற விதைகளை, இந்திய பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் உதவியுடன், எந்த ஆபத்தும் இல்லாதவை என்று நிறுவுவதற்கு பல சக்திகள் முயற்சி எடுத்து வருகின்றன. நல்ல வேளையாக மத்திய மரபணுதொழில் நுட்ப அனுதிக்குழுவின் பரிந்துரைக்குப் பின்னரும், அதனை அப்படியே நடைமுறைப் படுத்தி விடாமல் மரபணுமாற்ற விதைகள் குறித்து மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில், பல்வேறு தரப்பினரின் கருத்தைக் கேட்பதற்கான கூட்டங்களை நடத்திவருகிறது. பொதுவாக அதிகார மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அப்படியே அமல் படுத்துவதுதான் நம் நாட்டில் இதுவரையிலான நடைமுறையாக இருந்துவருகிறது. மரபணு மாற்ற விதைகளின் விவகரத்தில், இந்த அணுகுமுறையில் சற்றே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே நமக்குக் கிடைத்த வெற்றிதான்.

இது தொடர்பாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் கேள்விக்கு பதில் தெரிவித்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் முக்கியமானவை. மரபணுமாற்ற கத்திரிக்காய் குறித்து போதிய ஆய்வுகள் நடைபெற வில்லை என்றும், இதற்கு அனுமதி அளிக்குமாறு பரிந்துரைத்துள்ள அமைப்பு ஒரு சட்டபூர்வ அமைப்பு மட்டுமே என்றும், இந்த விவகாரத்தில் மக்களின் பொது சுகாதாரத்தைக் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளதென்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல; வேளாண்துறையில் பசுமைப்புரட்சி தொடங்கி, அறிவியல் தொழில் நுட்ப அடிப்படையிலான அத்தனை நடவடிக்கைகளையும் ஆதரித்து வரும் எம்.எஸ். சுவாமிநாதன் கூட, மரபணு மாற்ற விதைகள் குறித்து போதிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்றும், இந்தியாவில்  இயல்பாக உள்ள பல்லுயிர் வளத்தை இதுபோன்ற மரபணு மாற்ற விதைகள் அழித்துவிடக் கூடும் எனவும்,  புகையிலையால் புற்று நோய் வருவதைப்போல் இந்த விதைகளால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷையும், எம்.எஸ்.சுவாமிநாதனையும் இவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லுவார்களா? அறிவியல் தொழில் நுட்பம் என்பதற்காக, மனித இனத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

மேலும், மரபணுமாற்றம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் பார்வையாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் புஷ்ப பார்கவா, மீராசிவா, ஐரோப்பிய லீட்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர்ஆண்ட்ரியோ, ஐரோப்பிய மரபணு உயிரி தொழில்நுட்ப அனுமதிக் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் செராலினி போன்றவர்களும், மரபணு மாற்ற விதைகள் குறித்து போதிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

கேள்வி : மரபணுமாற்ற விதைகள் எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?

பதில் : இந்த கேள்விக்கு பதில் கூறுமுன் முதலில் மரபணு மாற்ற விதைகள் எந்த அளவுக்கு விபரீதமான விளைவுகளை உருவாக்க கூடும் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. மரபணு மாற்றம் என்பது ஓர் உயிரின் நுண்ணுயிரியை எடுத்து, இன்னொரு உயிரின் நுண்ணுயிரியுடன் சேர்த்து புதிய உயிரியை உருவாக்குவதாகும். இதன் விளைவுகள் குறித்து இதுவரை எந்த ஒரு தெளிவான முடிவுகளும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், மரபணு மாற்றவிதைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக சர்வதேச நாடுகள் மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

1.   மரபணு மாற்ற விதைகளால் கடுமையான ஒவ்வாமை நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

2.  மரபணுமாற்ற காய்களின் மூலம் மனித உடலில் உட்புகும் புதிய நுண்ணுயிரிகள், ஏற்கனவே   உடலில் உள்ள நல்ல விளைவுகளை நுண்ணுயிரிகளை அழித்துவிடும் வாய்ப்பு உள்ளது.

3. மரபணுமாற்ற விதைகள் மூலம் உருவாக்கப்படும் புதிய காய்கள், ஏற்கனவே இருந்து வரும் மரபார்ந்த காய்களின் நல்ல தன்மையை சிதைத்துவிடக் கூடும். (உதாரணத்திற்கு மரபணுமாற்றக் கத்திரிக்காய்கள் ஏற்கனவே இங்குள்ள நாட்டுக் கத்திரிக்காய்களுடன் கலக்கும் போது, அவற்றின் மூலிகைத்தன்மை அழிந்துவிடும்)

மரபணு மாற்றம் என்பது ஓர் உயிரின் நுண்ணுயிரியை எடுத்து, இன்னொரு உயிரின நுண்ணுயிரியுடன் கலந்து, அதனுடன் புதிய புரதத்தை செலுத்தி, புதிய நுண்ணுயிரியை உருவாக்குவது. இத்தகைய மரபணுமாற்றத்தின் விளைவுகள் குறித்து இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.

ஒரு சில உதாரணங்களின் மூலம் அதன் பயங்கர விளைவுகளை நம்மால் மதிப்பிட முடிகிறது. எடுத்துக்காட்டுக்கு குரங்கை வைத்துக் கொள்ளலாம். குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்பது உயிர்ப்பரிணாமக் கோட்பாடு. குரங்கின் நுண்ணுயிரிக்கும், மனிதனின் நுண்ணுயிரிக்கும் உள்ள வேறுபாடு 0.1 விழுக்காடு மட்டுமே. மிக குறைவான, நுண்ணிய இந்த வேறுபாடு, குரங்காகவும், மனிதனாகவும் இரண்டு இனத்தை வேறுபடுத்தி உள்ளது. ஒரு மனிதனின் நுண்ணுயிரிக்கும், இன்னொரு மனிதனின் நுண்ணுயிரிக்கும் உள்ள வேறுபாடு இதைவிடக் குறைவானது. ஆனால், ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனின் தோற்றம், குணம், மனம் உட்பட அனைத்தும் வேறுபட்டுவிடுகின்றன.

அப்படி இருக்கும் போது ஒரு புதிய நுண்ணுயிரியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கள் எந்த அளவுக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சுக்குப் பின்னும், போபாலில் விஷவாயுக் கசிவினாலும் ஏற்பட்ட கொடிய மாற்றங்கள், மரபணு மாற்ற விதைகளாலும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இவை மருத்துவ மற்றும் உயிரியல் ரீதியாக ஏற்படக்கூடிய பின் விளைவுகள். இன்னொன்று நமது இறையாண்மை சார்ந்தது.

ஏற்கனவே மரபணுமாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளால், மகாராஷ்டிர மாநிலம் விதார்பா மாவட்டத்தில், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள். இன்னும் கூட அங்கு தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் மரபணு மாற்ற விதைகள் ஒரு முறைதான் முளைக்கும். நம்முடைய பாரம்பரிய விதைகளைப் போல அடுத்த போகத்துக்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது. இதில் இருந்து விதைகள் என்பதற்கான அடிப்படைத் தகுதியே அவற்றுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விதை என்றால் அதில் இருந்து கிடைக்கும் விதைகளும் முளைக்க வேண்டும். மரபணு மாற்ற விதைகளுக்கு இந்த தன்மை இல்லை. இதனால், ஒவ்வொரு முறை சாகுபடி செய்யும் போதும், மரபணு மாற்ற விதைகளை குறிப்பிட்ட அந்த நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும். அதற்கான உரம் உள்ளிட்ட இருபொருட்களையும் அந்த நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும். இப்படி ஆண்டு தோறும் மரபணுமாற்ற விதைகளுக்காகவும், அவற்றிற்கான உரங்களுக்காகவும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல்தான், மகாராஷ்டிர மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள்.

இதே விளைவுகள், கத்திரிக்காய்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இதையெல்லாம் விட, காலம் காலமாக நாம் பாதுகாத்து வந்த விதைகளும், அவற்றிற்கான உரிமையும், கண்ணுக்குத் தெரியாமல் நம்மிடம் இருந்து களவாடப்படும் என்பது இதன் இன்னொரு பக்க கொடுமை. மரபணு மாற்ற விதைகளை எதிர்க்க இவற்றை விடவும் காரணங்கள் தேவையா என்ன?

கேள்வி : மரபணு மாற்ற விதைகள் மற்றும் காய்கள் குழந்தைகளின் உடல் நலத்தில் தாக்த்தை ஏற்படுத்துமா?

பதில் : உண்மையிலேயே, மரபணு மாற்ற விதைகளால் மிக மோசமாக பாதிக்கப்படப் போவது நமது குழந்தைகள்தான். அதாவது நடுவயதைத் தாண்டியவர்கள் மரபணுமாற்ற காய்களை சாப்பிடப்போவது அதிக பட்சம் இருபது முப்பது ஆண்டுகள்தான். ஆனால் குழந்தைகளை பொறுத்த வரை இப்போது தொடங்கினால், அவர்களது ஆயுட்காலம் முழுவதும் இந்த காய்களைத்தான் சாப்பிடப்போகிறார்கள். அப்படியானால் மரபணுமாற்றக் காய்களின் நீண்டகால பாதிப்பு என்பது, குழந்தைகளின் உடல்நலத்தில் தான் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் நாகசாகி, ஹிரோஷிமா, போபால் போன்ற பயங்கர விளைவுகள் மரபணுமாற்ற விதைகளால் ஏற்படக் கூடும் என்று கூறினேன்.

ஆஸ்திரியாட்டில் மரபணுமாற்ற விதைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவற்றை நீண்டகாலம் உட்கொள்ளும்  ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரந்து நடைபெற்று வருகின்றன. அவற்றின் முடிவுகள் தெரியவரும் போதுதான், மரபணுமாற்ற விதைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையான விவரங்கள் வெளிச்சத்துக்கு வரும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை, மரபணுமாற்ற காய்களால், உடனடி விளைவாக ஏற்படக்கூடியது ஒவ்வாமை நோயாகும். இது தோல் அரிப்பு, சளி, காய்ச்சல் போன்று பலவகை நோய்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, மரபணு மாற்றக்காய்களால் நம்மை விட நமது சந்ததியினரான குழந்தைகளே மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதுதான் கசப்பான உண்மை.

கேள்வி : மரபணுமாற்ற விதைகளின் வருகையால் இந்திய மருத்துவத்துவத்துக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா?

பதில் : என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இப்போது கத்திரிக்காயை எடுத்துக் கொண்டால், இந்திய மருத்துவத்தில் முக்கியமான மூலிகைக் குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். பாரம்பரியமான அதன் உயிர்த்தன்மையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் மூலிகைத் தன்மையும் அழிந்துவிடும் அபாயம் ஏற்படத்தானே செய்யும். அதிலும், ஏற்கனவே இங்கு உற்பத்தியாகும் நாட்டுக்கத்திரிக்காய்களை விட பல மடங்கு விலை குறைவாக விற்பனை செய்யப்படும் என்று வேறு சொல்கிறார்கள். இதை விட வேறு என்ன ஆபத்து வேண்டும் நமக்கு?

இதே போன்று இப்போதைக்கு மேலும் 31 வகைச் செடிகள் மற்றும் காய்களை, மரபணுமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை நிறைவேறினால், மரபுரீதியான இந்திய மருத்துவத்தின் கதி என்னாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். மரபணுமாற்ற விதைகள் என்பது, தனித்தனியாக ஒவ்வொரு துறையிலும் பாதிப்பை ஏற்படுத்துவது அல்ல. விவசாயம், இயற்கை மருத்துவம், பெரியவர்கள், சிறியவர்கள், அவர்களது அன்றாட வாழ்க்கை, நாட்டின் சுயச்சார்புத் தன்மை என, ஓர் ஒட்டுமொத்த உயிரியல் தாக்குதலே அதன் மூலம் நடத்தப்படும்அபாயம் உள்ளது. அணு ஆயுதத்தாக்கதலுக்கு எந்த வகையிலும் இது குறைந்ததாக இருக்காது.

மரபணுமாற்ற விதைகள் என்பது, வளரும் மற்றும் ஏழைநாடுகளுக்கு எதிராக, வளர்ந்த நாடுகள் பயன்படுத்தப் போகும் இன்னொரு பேரழிவு ஆயுதம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“முன்னணி” செய்தி மடலுக்காக சந்திப்பும் தொகுப்பும்  : மேனா . உலகநாதன்

 

நன்றி : குழந்தை உரிமைக்கான முன்னணி அமைப்பு  
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *