கலைஞரின் மகனாக நின்று ராகுலை முன்மொழிகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின்

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதுகுறித்து கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது:

1980ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள், அன்னை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக வேண்டும் என குரல் கொடுத்தபோது, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்றார்.

2004ம் ஆண்டு சென்னைத் தீவுத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை சோனியாகாந்தி அவர்களை குறிப்பிடும் போது, இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க! என்று முழக்கமிட்டார்.

2018 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், நான் அழைக்கிறேன்.

நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம். புதிய இந்தியாவை உருவாக்குவோம். தலைவர் கலைஞரின் மகனாக தமிழகத்தில் இருந்து ராகுல் காந்தி அவர்களின் பெயரை பிரதமர் வேட்பாளராக நான் முன்மொழிகிறேன்.

“ராகுல்காந்தியே வருக! நாட்டுக்கு நல்லாட்சி தருக!”

ராகுல் காந்தியின் கரத்தை அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் வலுப்படுத்துவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்; ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம்!

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞர் சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.