குட்கா ஊழல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே உடனடி தேவை: ராமதாஸ்..

குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே  உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். அதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிப்பதுடன், அமைச்சர் விஜயபாஸ்கரையும் பதவி நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில்  குட்கா உற்பத்தி செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ஆனால்,  மறுபுறம் குட்கா ஊழல் குறித்த விசாரணையை ஊழல் தடு ப்புப் பிரிவு முடக்குவது கண்டிக்கத்தக்கது.
தடை செய்யப்பட்ட குட்கா – பான் மசாலாவுக்கு ரூ.9 கோடி கலால் வரி
தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா உற்பத்தி செய்யப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் கடந்த 3 ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குட்கா நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாற்றை உறுதி செய்துள்ளன. வருமானவரித்துறை ஆய்வு நடத்திய குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மாதவராவிடம் வருமானவரித்துறை நடத்திய விசாரணையிலும் இதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக நியாயமான, வெளிப்படையான முறையில் விசாரணை நடத்த வேண்டும்  என்று தமிழக கையூட்டுத் தடுப்புப் பிரிவுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அதன் பிறகும்  இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் காவல் உயரதிகாரிகளை தவிர்த்து விட்டு, சாதாரண அதிகாரிகள் மீது மட்டும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா தயாரித்து விற்பனை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த சுங்கம் மற்றும் கலால் துறையின் கண்காணிப்புப் பிரிவு தலைமை இயக்குனரக உயரதிகாரி ஒருவர், ‘‘தமிழ்நாட்டில் குட்கா தயாரித்து விற்கப்பட்டது உண்மை. எம்.டி.எம். நிறுவனம்  தானாக முன்வந்து கலால் வரி செலுத்தியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் குட்கா உற்பத்தி செய்து விற்கப்பட்டது உறுதியாகியுள்ளது; அதற்கு துணை போனதாக தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 17 பேர் மீது தமிழக காவல்துறையின் கையூட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆட்சி அதிகாரத்திலும், காவல்துறையிலும்  மேலிடத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவை எப்படி சாத்தியமாகும்? குட்கா உற்பத்தி மற்றும் விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும்,தமிழக காவல்துறையின்  உயரதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் உரிமையாளரே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கையூட்டுத் தடுப்புப் பிரிவு தயங்குவது ஏன்? என்பது தான் எங்களின் வினாவாகும்.
குட்கா ஊழல் குறித்து சுங்கம் மற்றும் கலால் துறையின் கண்காணிப்புப் பிரிவு தலைமை இயக்குனரக உயரதிகாரி தெரிவித்துள்ள மற்றொரு உண்மை குறிப்பிடத்தக்கது. ‘‘குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எங்கள் துறை அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாற்றுகளை நிரூபிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இருந்தால் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு நாங்கள் மாற்றுவோம்’’ என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார். ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், காவல்துறை உயரதிகாரிகள் இருவரும் கையூட்டு வாங்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் போதிலும் கூட, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு மறுக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவோ, வருமானவரித்துறை சோதனை குறித்த மூல ஆதாரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கருவிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே விசாரணையை தொடர முடியும் என்று கூறி குட்கா ஊழல் விசாரணையை முடக்கி வைத்திருக்கிறது. இது குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி.
இவ்வழக்கில் கையூட்டு தடுப்புப் பிரிவின் செயல்பாடுகள் ஆரம்பம் முதலே  ஐயத்திற்கிடமான வகையில் உள்ளன. மாறாக, இந்த வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக அரசை வருமானவரித்துறை வலியுறுத்தி வருகிறது. ஆனால், அத்துறையை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும், வழக்கு குறித்த ஆதாரங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை கொடுத்த பிறகும் அதன் மூல நகல்களை வருமானவரித்துறை சிதைத்து விடும் என்று கூறு மூல ஆதாரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கருவிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கையூட்டுத் தடுப்புப் பிரிவு அடம் பிடிப்பதும் விசாரணையை தாமதிக்கும் வித்தை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே  உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். அதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிப்பதுடன், அமைச்சர் விஜயபாஸ்கரையும் பதவி நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.