தமிழக உரிமைகளுக்காக போராடும் தலைவர் ஸ்டாலின் என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன்: செந்தில் பாலாஜி

தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் ஸ்டாலின் என்பதாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பான தலைவராக அவர் இருப்பதாலும் திமுகவில் இணைந்திருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினைச் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த பின்னர் அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 

தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன். அதனால், திமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, திமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளேன். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக அரசுக்கு அடிபணிந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநில உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஸ்டாலின் பால் ஏற்பட்ட ஈர்ப்பால் திமுகவில் இணைந்துள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சராக மக்கள் வரும் தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள். திமுகவில் அரசியலைத் தொடங்கியவன் நான். ஜெயலிலதா உயிருடன் இருக்கும் வரை அக்கட்சியில் உண்மையாக இருந்து உழைத்தேன். தற்போது அவர் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இணைந்துள்ளேன். திமுகவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

ஒரு தலைமையின் கீழ் பணியாற்றினேன். தற்போது எனது முடிவால் ஏற்பட்ட ஆதங்கத்தால் சில கருத்துகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். திமுகவில் நான் இணைவது வியப்பை ஏற்படுத்தியதன் விளைவாக அதுபோல கூறியிருக்கலாம். தமிழகத்தின் உரிமைகளுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஸ்டாலினுக்கு மகத்தான வெற்றியை அளிக்க மக்கள் தயாராக உள்ளனர். அந்த வெற்றிப் பயணத்தில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுகவில் இணைந்துள்ளேன்.

18 எம்எல்ஏக்களுக்கு எதிரான தீர்ப்பு வந்த போது தேர்தலைச் சந்திக்கலாம் என்று முதல் நபராக நான்தான் சொன்னேன். எனவே அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. என்னுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்எல்ஏக்களை நான் அழைக்கவில்லை. கரூர் மாவட்ட மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் நான் திமுகவில் இணைந்துள்ளேன்.

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அந்த இயக்கம் மூழ்கும் கப்பல். அவர்களை நம்பி அதிமுக தொண்டர்கள் பயணிக்க தயாராக இல்லை.  

கடந்த ஒரு மாத காலமாக அமமுகவின் எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை. திமுகவில் இணைய வேண்டும் என விரும்பியதால் அக்கட்சியின் நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்தேன். எனை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கரூர் மாவட்ட மக்களின் விருப்பப்படி திமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தின் உரிமைகளை, நலன்களை காப்பவராக ஸ்டாலினை பார்ப்பதால், திமுகவில் இணைந்துள்ளேன்.

நான் இதுவரை பணியாற்றி வந்த இயக்கம், தலைமை குறித்து விமர்சிப்பது நல்ல பண்பாக இருக்காது. மிக விரைவாக ஸ்டாலின் தலைமையை ஏற்று ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் உள்ள பல்லாயிரக் கணக்கானோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

தொண்டர்களை அரணவணைத்துச் செல்லக் கூடிய பண்புள்ளவர் ஸ்டாலின். அவரது அந்தச் சிறப்பான பண்பே திமுகவில் நான் இணையக் காரணம். திமுகவின் வெற்றிக்கு அயராமல் உழைப்போம்.  

இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.