திமுகவில் இன்று இணைகிறார் செந்தில் பாலாஜி

அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதாக தெரிகிறது.

இதற்காக கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் அவர் சென்னைக்கு சென்றுள்ளார்.

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணையப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியா கின. டிச.8-ம் தேதி திமுகவில் இணைவார் என்று முதலில் தகவல்கள் வெளியான நிலை யில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் டிச.16-ம் தேதி இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று (டிச.14) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலைஞர் அறிவாலயத்தில் இன்று (டிச.14) காலை 11 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் செந்தில்பாலாஜி கட்சியில் இணைய மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி, அமமுக நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் தாரணி சரவணன், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள், அமமுகவில் உள்ள செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் வேன், கார்க ளில் நேற்று சென்னைக்குப் புறப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட இவர்கள் அனைவரும் பெரம்பலூ ரில் ஒன்றிணைந்து அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் தெரிகிறது.

யாருய்யா இந்த செந்தில் பாலாஜி…

கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவரது இயற்பெயர் செந்தில்குமார். நியூமராலஜி குமாரை நீக்கிவிட்டு, பாலாஜியை சேர்த்துக்கொண்டார்.

இவர் கல்லூரி பருவத்திலேயே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர். செந்தில் பாலாஜி தனது அரசியல் பிரவேசத்தை மதிமுகவில் இருந்து தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து 2000-ம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது இளமை பருவ அரசியல் திறமையால் தொடக்கத்தில் மாணவரணி பொறுப்புகளும், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டது.

தனது அசுர வளர்ச்சி மூலம் 2006-ம் ஆண்டு கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். முக்கியமாக திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வந்தார். 2011-ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு ஜெயலலிதா அமைச்சர் பொறுப்பு வழங்கினார். பல்வேறு புகார் காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.

தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பணம் பலத்தால் கரூரில் அசைக்க முடியாதவராக திகழ்ந்து வந்தார். 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. இதில் தினகரன் தரப்புக்கு ஆதரவாக இருந்த செந்தில் பாலாஜி, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். மேலும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் எம்எல்ஏ பதவியை இழந்த செந்தில்பாலாஜி இன்று (டிச-14)  திமுகவில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.