திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திராவிடர் கழக பொருளாளர் டாகடர் பிறைநுதல் செல்வி  கார் விபத்தில் மரணமடைந்ததார். அவரது மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்சயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கார் விபத்தில் மரணமடைந்தை பிறைநுதல் செல்விக்கு வயது 72. அவர் தன்  கணவர் கவுதமனுடன் குன்னூரில் வசித்து வந்தார் .  திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு திருப்பூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து குன்னூருக்கு சென்று கொண்டிருந்த பிறைநுதல் செல்வியின் கார் மீது காட்டேரிப் பகுதியில் எதிரே வேகமாய் வந்த கார் ஒன்று மோதியது .

மோதிய வேகத்தில் காரில் பிறைநுதல் செல்வி அணிந்திருந்த சீட் பெல்ட் கொக்கி அவரது வயிற்றில் குத்த காயம் ஏற்பட்டது. பின்னர் குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்[பட்டது . ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் . பிறைநுதல் செல்விக்கு இனியன் என்ற மகனும் , யாழிசை என்ற மகளும் இருக்கின்றனர். 

ஈரோட்டைச் சேர்ந்த இவர் 22 ஆண்டு காலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராகவும், கோத்தகிரி தலைமை ஆஸ்பத்திரியில்  தலைமை டாக்டராகவும் , மாவட்ட சுகாதார இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிறைநுதல் செல்வி .

அவரது உடல் குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருக்கிறது .

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்து சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தபோது நமது இயக்கக் கண்மணிகள், கொள்கைக் குன்றுகள், குன்னூர் டாக்டர் கவுதமனும், அவரது வாழ்விணையரும், திராவிடர் கழகப் பொருளாளருமான டாக்டர் பிறைநுதல் செல்வியும் விபத்துக்குள்ளானார்கள் என்ற செய்தி கிடைத்தது.

இதில் பிறைதுதல் செல்வி மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைப் போல் ஒரு கொள்கைச்செல்வம், ஒரு பண்பாட்டின் உருவம், பாசத்தின் ஊற்று, ஒழுக்கம், தன்னடக்கத்தின் எழிற்கோல மனிதத்தை எளிதில் பார்க்க முடியாது. அவரை இழந்துவாடும் எனது கொள்கை உறவுக் குடும்பமே, ஆறுதல் கொண்டு துணிவுடன் அவர் தொண்டை தொடர ஆயத்தமாவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-

திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து துடிதுடித்துப் போனேன். அருமை சகோதரியாரை இழந்த துயரில் துடிக்கும் அவரது வாழ்க்கைத் துணைவர் டாக்டர் கவுதமனுக்கும் அவரது இலத்தவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் துயரம் தோய்ந்த உள்ளத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.