நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்: கோவை சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜராக உத்தரவு..

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் நக்கீரன் கோபால், தேனி கண்ணனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் தொடர்பான விவகாரம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 15ம் தேதி ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர். அந்த விசாரணைக்கு நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, தன்னை போலீசார் கைது செய்ய நேரிடும். எனவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் நக்கீரன் கோபால், தேனி கண்ணனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜராக 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.