நீட்- மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுப்பு… ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் அவலம்


நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகளை சிபிஎஸ்இ அதிகாரிகள் பிளேடால் அறுப்பதால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 2255 மையங்களில் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவர்களும், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 5000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தை காட்டிலும் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள் ஏ பிரிவு, பி பிரிவு என நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஏ பிரிவு மாணவர்கள் 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், பி பிரிவு மாணவர்கள் 8.30 மணி முதல் 9.30 மணி வரையும் அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் மாணவிகளின் கொலுசு, கைக்கடிகாரம், கம்மல் ஆகியவற்றை கழற்றி அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

கைகளில் கட்டியுள்ள மதம் சார்ந்த புனித கயிறுகளையும் அறுத்துவிட்டுத்தான் தேர்வுக் கூடத்துக்கு அனுமதிக் கப்படுகின்றனர்.  சில தேர்வு மையங்களில் மாணவர்கள் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுக்கப்படுகிறது.  இதனால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.