பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர் மசோதாவை தாக்கல் செய்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். இதனிடையே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக ஆளுநர் நியமிப்பதாக சர்ச்சை எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என உறுதியளித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இதுபோலவே சட்டமன்றத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது, புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு, 2022ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்திருத்த சட்ட முன்வடிவு ஆகியவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்யவுள்ளார்.
ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் சூழலில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.