பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கே.பி.அன்பழகன்..

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை முதல் ஆக. 16-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் எனவும் கூறினார்.

அக்டோபர் 15-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க AICTE உத்தரவிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி நிலையங்களில் அடுத்த கல்வியாண்டுக்கான ஆயத்த பணிகள் என அனைத்தும் காலதாமதமாகி உள்ளது.

மேலும் 2020-2021ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான காலஅட்டவணையை (ஏ.ஐ.சி.டி.இ.)என்கிற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்சமீபத்தில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 5-ம் தேதிக்குள்ளும், 2ம்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 15-ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது என கலந்தாய்வு என பெரிய கேள்வி எழும்பியது. தமிழகத்தில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் முதற்கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு துவங்கியது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தேதி அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டார். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது; இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம். www.tneaonline.org. என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்று திறனாளிகள் நேரில் வர வேண்டாம். ஆகஸ்ட் 16 வரை ஆன் லைனில் பதிவு செய்யலாம். தற்போதைய சூழலில் 465 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. விளையாட்டு பிரிவை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டாம். மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 8000 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் ஆன் லைனிலேயே சான்றிதழை சரிபார்த்தனர். சான்றிதழ்களை சரிபார்க்க தமிழகம் முழுவதும் 52 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். +2 முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும்.