ரோபோக்களின் வருகையால் 80 கோடி பேர் வேலை இழக்கப் போகும் அபாயம்!

பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 80 கோடி பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைக் கின்சி அன் கோ (McKinsey & Co) என்ற ஆய்வு அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

 

தகவல் தொழில் நுட்பம் மட்டுமின்றி, ராணுவம், வங்கிப் பரிமாற்றம் என பல்வேறு அத்தியாவசியத் துறைகளிலும் செயற்கை நுண்ணறி திறனைக் (Artificial Intelligence) கொண்ட ரோபோக்களைப் பயன்படுத்தும் முயற்சியில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

 

அண்மையில், ராணுவத்தில் ரோபோட்டுகளைப் பயன்படுத்தும் முயற்சியில் சீனா முன்னேறி வருவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்திருப்பது, இந்தத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்திற்கு ஓர் உதாரணம்.

இதனால், வரும் 2030க்குள் 46 நாடுகளில் மனித உழைப்புக்கான 800 வகையான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என மைக் கின்சியின் ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இத்தகைய வேலை வாய்ப்பிழப்பு அபாயத்தை போக்கும் வகையில், 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழில்துறை கொள்கை (Industrial Policy) மற்றும் 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய உற்பத்திக் கொள்கை (2011 New Manufacturing Policy) ஆகியவற்றை முற்றிலும் மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இந்த திருத்தங்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரோபோட்டுகளிடமிருந்து இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்பு தப்புமா?