10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரும் வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு…

10-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கூடாதா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குகின்றன.

அதன்படி, தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை வரிசைப்படுத்தி தினமும் தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், இன்று அதனை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வு தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

மேலும், தேர்வை 1 மாதம் ஒத்திவைப்பது தொடர்பாக பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பல முக்கிய கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளதால், அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 2.30 மணிக்கு நீதிமன்ற அமர்வு மீண்டும் கூடியதும், வழக்கிற்கு தொடர்பு இல்லாதவர்களை வீடியோ கான்ஸ்பிரன்சில் இருந்து வெளியேற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளதால், இப்போதே தேர்வு நடத்தி முடிப்பது நல்லது என்று அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் என்று அரசு கூறியுள்ளது.

தேர்வின் போது மத்திய அரசின் வழிக்காட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரொனா தொற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. 10 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம்; பொதுத்தேர்வை பின்னாளில் நடத்துவது ஆபத்தானது என்றும் தமிழக அரசு வாதிட்டது.

9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர், ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அரசுக்கு கவலை இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை மாதம் ஏன் நடத்த கூடாது? என்று நீதிபதிகள் மீண்டும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இறுதியில் இந்த வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.