18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: அடுத்தது என்ன?

18 எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. தற்போதைய அதிமுக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுனர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கோரினார்.

இவர்களில் எஸ்.டி.கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என செப்டம்பர் 20ஆம் தேதியன்று இடைக்காலத் தடைவிதித்தார்.

இதற்குப் பிறகு இந்த வழக்கு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வழக்குகளில் அரசியல் சாஸனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இருப்பதால் வழக்கு டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு வழக்கு சுமார் மூன்று மாதங்கள் விசாரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும், அமர்வின் மற்றொரு நீதிபதியான சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணா அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

இந்தத் தீர்ப்பு இரண்டு விதமாகவும் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இரு விதமான தீர்ப்புகள் வந்தால் என்ன நடக்கும் என்பதையும் பார்க்கலாம்.

தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால் பேரவையின் பலம் 214 -ஆக தற்போதைய நிலையிலேயே நீடிக்கும்.

ஆட்சியமைக்க 108 இருந்தாலே போதுமானது. இதனால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மறு தேர்தல் முடிவு வெளிவந்த பிறகே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

மாறாக தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தால் பேரவையின் பலம் 232 ஆக உயரும் (214+18).

ஆட்சியமைக்க 117 உறுப்பினர்கள் தேவை. எனவே அதிமுகவுக்கு யாரும் ஆதரவு அளிக்காவிட்டால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். சட்டசபையில் அதிமுகவுக்கு 109 இடங்களும், திமுக கூட்டணிக்கு 97 இடங்களும் சபாநாயகர் ஒருவர், அமமுகவுக்கு ஒரு இடமும், தோழமை கட்சிகளுக்கு 3 இடங்களும் உள்ளன. மேலும் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்ளனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன.

திமுக கூட்டணியும் டிடிவி தினகரனும் அதிமுக அரசுக்கு ஆதரவு தரமாட்டார்கள். அதுபோல் தோழமை கட்சிகளில் அரசு மீது கருணாஸ் கடும் கோபத்தில் உள்ளதால் அவரது ஆதரவும் சந்தேகம்தான். தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் ரத்தினசபாபதி, எஸ்.ஆர். பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் ஆதரவு பெற்றாலும் சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவுக்கு 115 பேரே உள்ளனர்.

னவே ஆட்சி அமைக்க அதிமுக அரசுக்கு இரு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மற்றொரு பக்கம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இருதரப்பினருமே உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஜெயலிலதா மரணத்தில் தொடங்கிய இந்த அரசியல் கூத்து இந்தத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வருமா, அல்லது இழுத்துக் கொண்டே செல்லுமா என்பதுதான் தற்போது மக்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி.

 

 

 

 

18 MLAs Case: HC to pass the verdict Today morning 10.30 AM