மூன்றே வாரங்களில் ஐந்து தங்கப்பதக்கங்களை வென்ற தங்க மங்கை ஹிமா தாஸ்…

​சர்வதேச தடகளப் போட்டிகளில் மூன்றே வாரங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் ஹிமா தாஸ். தடைகளைக் கடந்து சாதனை படைத்த இளம் வீராங்கனை குறித்த ஒரு செய்தித் தொகுப்பு…

அசாம் மாநிலம் நவ்காவ் மாவட்டத்தில் உள்ளது கண்டுலுரிமாரி என்ற சின்னஞ்சிறு கிராமம். இங்குள்ள விவசாயியான ரோன்ஜித்-ஜோனாலி தம்பதியின் ஐந்து குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர்தான் ஹிமாதாஸ்.

சில ஆண்டுகளுக்கு முன் கவுஹாத்தியில் நடைபெற்ற கால்பந்து பயிற்சி முகாம் ஒன்றிற்கு வந்த ஹிமாவின் ஓட்டப் பந்தயத் திறனைக் கண்டு வியந்திருக்கிறார் பயிற்சியாளரான நிபுண் தாஸ்.

ஹிமாவின் குடும்பத்தினரை அழைத்துப் பேசிய அவர், அச்சிறுமியின் பயிற்சிக்கான செலவை தாமே ஏற்றுக் கொள்வதாகக் கூறி பயிற்சி அளித்துள்ளார்.

தொடக்கத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் பந்தயங்களில் ஓடிவந்த ஹிமா தாஸ், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்தினார்.

கடுமையான பயிற்சியை மேற்கொண்ட அவர், கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றிய ஹிமா, பின்லாந்தில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இடைவிடாத பயிற்சியை மேற்கொண்ட ஹிமாதாஸ், கடந்த 20 நாட்களாக ஐரோப்பாவில் சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

போலந்தில் போஸ்னான் கிராண்ட்பிரி தடகளப் போட்டி, குட்னோ தடகளப் போட்டி, செக் குடியரசில் கிளாட்னோ தடகளப் போட்டி, டாபோர் தடகளப் போட்டி ஆகியவற்றில் 200 மீட்டர் பிரிவுகளில் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சனிக்கிழமை செக்குடியரசில் நடைபெற்ற 400 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.

மூன்றே வாரங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள ஹிமாதாசுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு பாராட்டுகளையும், எதிர்காலத்தில் போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் ஹிமா, அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஹிமா, வெற்றி என்ற இலக்கை மட்டுமே குறிவைத்து ஓடியதால் இன்று சாதனையாளராக உயர்ந்து நிற்கிறார்.

சாதிக்கத் துடிக்கும் வீரர்-வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளித்தால் சர்வதேச அரங்கில் நாட்டின் புகழை உயர்த்துவார்கள் என்பது திண்ணம்..