இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு : 117 தொகுதிகளில் நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் 13 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 117 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.

குஜராத்தில் 26 தொகுதிகள், கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், சட்டீஸ்கரில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகளில், கோவாவில் 2 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, திரிபுராவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குல்பர்கா தொகுதியிலும், மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே உத்தர கன்னடா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட திரிபுரா மாநிலத்தின் கிழக்குத் தொகுதியிலும் பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று காலை தேர்தல் தொடங்கியது. இந்தத் தொகுதியின் நிலைமையைக் கண்காணிக்க முன்னாள் துணைத் தேர்தல் ஆணையர் வினோத் ஸூத்ஸி என்பவரை சிறப்புப் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தத் தேர்தலுடன் குஜராத் மாநிலத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.