வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை: பிரதமர் மோடி (வீடியோ)

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் தமது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.

வீட்டுக்கு வெளியில் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கமிட்ட மக்கள் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அகமதாபாத் நகரில் ராணிப் என்ற இடத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்ற பிரதமர் மோடியை காந்திநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், கட்சித் தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது அமித்ஷா குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையுடன் பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார்.

வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த மோடியைப் பார்த்து அங்கிருந்த மக்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலத்தில் வாக்குப் பதிவு செய்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். சிறந்த எதிர்காலத்தை தேர்வுசெய்ய அனைவரும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதத்தின் ஆயுதம் ஐ.இ.டி. எனப்படும் வெடிகுண்டு என்ற அவர், ஜனநாயகத்தின் ஆயுதம் ஓட்டர் ஐ.டி. எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை என்றார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என புரிந்துகொண்டு அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். கும்பமேளாவில் நீராடி புனிதம் அடைவது போல ஜனநாயகத் திருவிழாவில் வாக்களித்துப் புனிதம் அடையுமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.