முக்கிய செய்திகள்

5 இருக்கைகள் கொண்ட பறக்கும் வாகனம் வெற்றிகரமாக ஜெர்மனி சோதனை

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு உதவும், 5 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், வானில் பறந்து செல்லும் வாடகைக் கார் என்று பொருள்படும் ஏர்-டாக்சிகளை, குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பல்வேறு திட்டங்கள் உள்ளன.

இருந்த இடத்தில் இருந்து உயரே எழும்பி, அதேபோல கிடைமட்டமாக தரையிறங்கும் ஏர்-டாக்சிகள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த ஏர்-டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் வாகனங்களை 2025ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் இயங்கி வருகிறது.

5 இருக்கைகளுடன் கூடிய, பேட்டரியில், ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படும் மாதிரி வாகனத்தையும் அந்த நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே, லில்லியம் ஜெட் மணிக்கு 300 கிலோமீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.