ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா? : 10% இட ஒதுக்கீடு குறித்து சிதம்பரம் கருத்து..

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்ட வடிவம் பெறும்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும்.

அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம் விமர்சனம்

இந்த நிலையில், மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம்,

அதாவது 125 கோடி, ஏழைகளாம் ! மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை.

இது எப்படி இருக்கு. ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.