“80 வயசாகுது நேர்ல வந்து பாத்துருக்கேன்; 10 வருஷமா நீங்க என்ன பன்னீங்க?”: அதிமுகவிற்கு அமைச்சர் துரைமுருகன் கேள்வி!..

கடந்த 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லாமல் அது குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க.,விற்கு எந்த உரிமை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் இன்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர்,
முல்லை பெரியாறு அணை விவகாரத்தை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தகுதியில்லை என்று குறிப்பிட்டார். இருவரும் அமைச்சராக இருந்த போது எதுவும் செய்யாமல் தற்போது உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றால் நாடு சிரிக்காதா என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தேனி மாவட்டத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலா சென்றிருந்தால் கூட அணையை பார்த்திருக்கலாம்.

10 ஆண்டு காலத்தில் எந்த அமைச்சரும் முல்லை பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், முல்லை பெரியாறு அணையில் 30 ஆண்டு சராசரியை கணக்கிட்டு நீர் தேக்கும் உயரம் கணக்கிடப்பட்டது. தற்போதைய நிலவராடி முல்லை பெரியாறு அணையில் 139.05 அடி உயரம் வரை நீரை தேக்கி கொள்ளலாம். 30 ஆண்டு சராசரி கணக்கீட்டுபடி நவம்பர் 30ம் தேதி முல்லை பெரியாறில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம். பேபி அணையில் உள்ள 3 மரங்களை அகற்ற வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. பேபி அணை கட்டுவதற்கு இடையூறாக விழுந்து கிடக்கும் 3 மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

3 மரங்களையும் அகற்றவிடாமல் கேரளத்தின் ஒரு துறை மற்றொரு துறையை நோக்கி கை காட்டி வருகிறது. 3 மரங்களும் அகற்றப்பட்டால் தான் பேபி அணையை உடனடியாக கட்ட முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எனக்கு நீண்ட காலமாக அறிமுகமானவர்; நல்ல நண்பர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காலத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்று துரைமுருகன் குறிப்பிட்டார். வரும் சில நாட்களில் ஆழியாறு அணையை பார்வையிட உள்ளதாகவும், கொரோனா காலம் காரணமாகவே முல்லை பெரியாறு அணையை நேரடியாக பார்வையிடுவது தாமதமானது என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு அணையையும் பார்வையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.