பரபரப்புடன் வெளிவருகிறது ப. சிதம்பரத்தின் பணமதிப்பிழப்பு புத்தகம்..

பணமதிப்பிழப்பு தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை பேசிய, வெளியிட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து பொதுமக்களிடம் நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வரும் நவம்பர் 8-ம் தேதி அன்று இதை வழங்க முடிவுசெய்துள்ளனர்.
‘‘500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி. அந்த நாளைக் கறுப்பு நாளாக அறிவித்திருக்கின்றன காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 18 கட்சிகள். அன்றைய தினம் நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் அன்றைய தினம், ‘மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில், அந்த நாளை கறுப்புப் பண எதிர்ப்பு நாளாக அனுசரிக்க முடிவெடுத்துள்ளது பி.ஜே.பி.
இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரும் 8-ம் தேதியுடன் ஒரு வருடத்தைப் பூர்த்திசெய்ய இருக்கிறது. பணமதிப்பிழப்பால் நாடே அவஸ்தைக்குள்ளாகியது. இதனால், விவசாயிகள், வணிகர்கள், ஏழை எளிய மக்கள் எனப் பலரும் பலவகையிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். வங்கிகளில் பணத்தை மாற்றவும், எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பிரச்னையால் மக்களின் வாழ்வு முடங்கிப்போனது. இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குக் கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்தன.
இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக, இந்த நடவடிக்கைக்கு ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரம் பேசிய கருத்துகள் அடங்கிய புத்தகம்‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நிச்சயமாகப் பொருளாதார சரிவு ஏற்படும்’’ என்று ப.சிதம்பரம் அப்போதே கூறினார். தொடர்ந்து, ‘‘மத்திய அரசால் கடந்த நவம்பர் 8-ம் தேதி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல்’’ என்றும் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர், ‘‘மக்களை அவதிக்குள்ளாக்கும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, எவ்வித பலனையும் தராது. ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, தீவிர விசாரணை நடத்த வேண்டும். 3 சதவிகிதம் இருக்கும் மின்னணுப் பரிமாற்றத்தைச் சில மாதங்களில் 100 சதவிகிதமாக மாற்ற முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்னர் யஷ்வந்த் சின்கா அல்லது மன்மோகன் சிங் போன்றவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யாரிடமும் கேட்காமல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். ஓர் இயற்கைப் பேரிடர்கூட இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது’’ என்று மத்திய அரசை அப்போது கடுமையாகச் சாடினார்.
இப்படிப் பணமதிப்பு நீக்கம் தொடர்பாக அவர் பேசிய கருத்துகள், பேட்டிகள், உரைகள் ஆகியவற்றைத் தொகுத்து, வரும் 8-ம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள், ‘‘கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது மத்திய அரசு. அந்த நாளைக் கறுப்பு நாளாக அறிவித்து, வரும் நவம்பர் 8-ம் தேதியன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றன எதிர்க் கட்சிகள். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பணமதிப்பு நீக்கம் தொடர்பாக எங்கள் தலைவர் (ப.சிதம்பரம்) தெரிவித்த கருத்துகளைப் பொதுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக‘மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு அறிவிப்பு’ என்ற புத்தகத்தை அச்சடித்து வருகிறோம். 126 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில், பணமதிப்பு நீக்கம் தொடர்பாக எங்கள் தலைவர் இதுவரை பேசிய, வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு உள்ளன. இதற்காக முதல் கட்டமாக ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட இருக்கின்றன’’ என்றனர்.

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளம் தினத்தந்தி: ஸ்டாலின் புகழாரம்…

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது..

Recent Posts