போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் ஊதிய உயர்வுக்காக போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
”எங்களை மாயாவிகள் என்றெல்லாம் பேசுகிறார்கள், என்னை மறைமுகமாக அமைச்சர் தங்கமணி விமர்சித்தபோது அதற்கு நான் பதிலளிக்க சட்டப்பேரவை அனுமதி அளிக்கவில்லை. இன்று என்னை ஓபிஎஸ் பெயர் சொல்லி அழைக்கிறார். சார் சார் என்று இவர் நின்றது அனைவருக்கும் தெரியும்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி இல்லாததால் தியானம் செய்தவர். இன்று துணைமுதல்வராக இருக்கிறார். தன்னைப் பதவியை விட்டு நீக்கியவுடன் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி எனப் பேசியவர் ஆட்சியை கவிழ்க்க முயன்றார்.
என்னை துணை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்தவரே அமைச்சர் தங்கமணிதான். சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என்று சட்டப்பேரவை குழு தலைவராக கையெழுத்து போட்டு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றவுடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் வெளியே சென்றவர் செம்மலை. தர்மயுத்தம் நடத்தியதே துணை முதல்வர் பதவிக்குத்தானே.
எம்.எல்.ஏ சம்பளம் உயர்த்தும் மசோதா தேவையற்றது. சட்டமன்றத்தில் மசோதா வந்தபோது, சம்பளம் உயர்த்தியதை நானே எதிர்த்துப் பேச முயன்றேன். ஆனால் என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆம் என்போர் கைதூக்குக என்ற போது இல்லை என்று பலமாக சத்தம் போட்டேன்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் மட்டுமல்ல சம்பளத்துக்கு போராடும் நேரத்தில் மற்ற துறைகளிலும் இந்த பிரச்சினை உள்ள நிலையில் இது தேவை இல்லை என்கிறேன். தங்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களை தக்கவைக்கவே இந்த சம்பள உயர்வு”
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.