ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அருகே அமர்ந்து ‘சுய இன்பத்தில்’ ஈடுபட்ட நபர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25000 சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர். அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 7-ம் தேதியன்று ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அருகே அமர்ந்திருந்த ஆண் ஒருவர் திடீரென சுய இன்பத்தில் ஈடுபட்டு அந்த மாணவியை அதிர வைத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவி டெல்லி வசந்த விஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை அவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானமாக ரூ.25000 வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மாணவி அளித்த புகாரில், “கடந்த 7-ம் தேதி மதியம் 3 மணியளவில் நான் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எனது அருகே ஒரு ஆண் அமர்ந்திருந்தார். நான் என் கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தேன். திடீரென அந்த நபர் அவரது முழங்கையால் எனது இடுப்புப் பகுதியில் அவ்வப்போது உரசினார். நான் நகர்ந்து உட்கார்ந்தேன். மீண்டும் அவ்வாறு செய்தபோது அவரை உற்று கவனித்தேன். அப்போதுதான் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டிருந்தது எனக்குத் தெரிந்தது. அதிர்ந்து போன நான் சற்றே சுதாரித்துக் கொண்டு எனது செல்போனில் அவரைப் படம் பிடித்தேன். பின்னர் அவரை நோக்கி குரல் எழுப்பினேன். அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சத்தமாக அவர் செய்வதைக் குறித்து கூச்சலிட்டேன். ஆனால், பேருந்தில் இருந்த யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. அப்போது பேருந்தில் 30 பேர் இருந்தனர். நான் மீண்டும் அந்த நபரை நோக்கி ஆவேசமாக திட்டித்தீர்க்க அடுத்துவந்த பேருந்து நிலையத்தில் அவர் இறங்கிச் சென்றுவிட்டார். வீடு திரும்பியவுடன் இச்சம்பவம் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் இதைப் பற்றி போலீஸில் தெரிவிக்க தயங்கினர். என்னால் அந்த அருவருப்புச் சம்பவத்தை தாங்கிக் கொள்ளவில்லை. அதனால், எனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை அப்லோட் செய்து அதை டெல்லி போலீஸ், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சில அதிகாரிகளையும் டேக் செய்தேன். பிப்ரவரி 10-ம் தேதி வசந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டெல்லி போலீஸார், அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு ரூ,25000 சன்மானம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.