18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாக அதிமுக கொறடா அளித்த புகாரின் பேரில் டிடிவி அணி எம்.எல்.ஏக்கள் 18 பேரிடம் விளக்கம் கேட்ட சட்டப்பேரவைத் தலைவர் அவர்களைத் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்க, 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
எனவே காலியாக உள்ள 18 தொகுதிகளிலும், தீர்ப்பு வெளியான நாளிலிருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானால் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் தற்போதுள்ள அதிமுக வென்றால்தான் அரசு பெரும்பான்மை பெற முடியும்.
இதனால் அதிமுக அரசு தேர்தலை தள்ளிப்போடுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதுதவிர திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியும் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில் காலியாக உள்ளது.
இந்நிலையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், 18 தொகுதிகளிலும் கடந்த முறை தேர்தல் நடத்துவதற்கு செலவான தொகையை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடமும் வசூலிக்க வேண்டும் என்றும்,
அதுவரை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அத்துடன், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.