விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

விஜய் மல்லையாவை நாடுகடத்தச் சொல்லி லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரூ. 9 ஆயிரம் கோடி வரை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளிடம் சுமாா் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016ம் ஆண்டு மாா்ச் 2ம் தேதி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றாா்.

அவரை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியா சாா்பில் தொடரப்பட்ட வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த டிசம்பர் 4ம் தேதி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் இங்கிலாந்தில் இருந்து கடத்தப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட மறு தினமே விஜய் மல்லையா கடனை திரும்ப செலுத்துவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அவற்றை நான் சட்டப்பூா்வமாக நான் சந்தித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பெற்றது கடனை முழுவதுமாக செலுத்திவிடுகிறேன்.

இதனை இந்திய அரசும், வங்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை கடனை வாங்க மறுத்தால்?” என்று கேள்வியுடன் தனது ட்விட்டா் பதிவை முடித்தார்.

தற்போது அவரது வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

வழக்கை விசாரித்த லண்டன் நீதிபதி எம்மா அர்பூத்நாட் விஜய் மல்லையா ஒரு மோசடிக்காரர், சதிகாரர், பண மோசடி பேர்வழி என தீர்ப்பின் போது குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ள

வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை, சிபிஐ வரவேற்றுள்ளது.

முன்னதாக, இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.

இந்த வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது இந்திய அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

முன்னதாக, இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டனில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதை தொடர்ந்து அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில், வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

அவர் இந்தியா கொண்டுவரப்படுவதற்கான அறிவிப்பை அமலாக்கத்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்பட்டால், அவர் மும்பை சிறைச்சாலையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு கொண்டுவரப்பட்ட பின்பு, அவர் மீது வழக்கு பதிவு செய்து இந்திய அரசு உரிய முறையில் விசாரணை நடத்தும்.

இருந்தாலும், விஜய்மல்லையா பெற்ற முழு கடனையும் வங்கிகளிடம் திருப்பி ஒப்படைப்பாரா என்பது சந்தேகமே.