கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை-கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் வீடியோ வெளியிட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரம் மாத இறுதியில் கொலை-கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பேட்டியுடன், சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை, பிரபல செய்தி இதழான தெஹல்காவின்,
முன்னாள் நிர்வாக ஆசிரியரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, மேத்யூ சாமுவேல், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
கொடநாடு சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி, தெஹல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தவறானவை என்று அவர் குறிப்பிட்டார்.
வீடியோ வெளியீடு தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
தவறான தகவலை வெளியிட்டவர்கள் மற்றும் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
கோடநாடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 முறை வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது நீதிமன்றத்தில் எதுவும் கூறாதவர்கள் தற்போது புதிதாகக் குற்றச்சாட்டுகளை கூறுவது ஏன் என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
கோடநாடு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதில் அரசியல் பின்புலம் இருப்பதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி,
இது வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பது விசாரணையின் மூலம்தான் தெரியவரும் என்றார்.