முக்கிய செய்திகள்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர்: மோடி குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெற்றுள்ளதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே மைக்கேல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல் அவருக்குக் கொடுக்கப்படும் முன்பே மீடியாக்களில் கசிந்தது.

இந்நிலையில் இதுகுறித்து டேராடூனில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று மாலை பேசிய பிரதமர் மோடி, ”துபாயில் இருந்து நாங்கள் நாடு கடத்திய நபர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரங்களை நான் ஊடகங்களில் பார்த்தேன். அதில், ‘AP’ மற்றும் ‘FAM’ஆகிய எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏபி என்பதன் அர்த்தம் அகமது படேல் என்பதாகும். எஃப்ஏஎம் என்பது ஃபேமிலியைக் குறிக்கும்.

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இடைத்தரகராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் (கிறிஸ்டியன் மைக்கேல்) ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான நம் அரசின் உறுதியான நடவடிக்கையை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) பாராட்டுவதில்லை. காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையானது அதன் கபட நாடகங்களில் ஒன்று.

இத்தனை ஆண்டு காலமாக நாட்டை அழித்தது காங்கிரஸ். ஆனால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் பாஜக தலைமையிலான அரசு கொண்டு சென்றுள்ளது” என்றார் மோடி.

அதே நேரத்தில் கிறிஸ்டியன் மைக்கேல், ஏப்ரல் 5-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் அகஸ்டா தொடர்பாக நான் ஒருவர் பெயரையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.