முக்கிய செய்திகள்

அகில இந்திய மருத்துவ படிப்பு; ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை…

மருத்துவ படிப்பில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மத்திய அரசுக்கோட்டாவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்காமல் 3 ஆண்டுகளாக புறக்கணிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டப்பின், தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு மூன்றாண்டுகளாக ஒதுக்கப்படவில்லை.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தொகுப்பிற்கு (ALL INDIA QUOTA) அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக 7981 இடங்களை அளித்திருந்தாலும், அதில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1378 இடங்களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப்படையில் 371 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக, பாமக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் கடந்த வாரம் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டதாக தெரிகிறது.

இந்தக்கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள், மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை, இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்படும் இடங்கள்,

அகில இந்திய மருத்துவக்கோட்டாவுக்காக ஒதுக்கப்படும் இடங்கள், ஓபிசி மாணவர்கள் புறக்கணிப்பால் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்பு, மத்திய அரசிடம் வைக்கப்படும் கோரிக்கை,

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையில் தாக்கல் செய்யவேண்டிய அம்சங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.