நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசப் போகிறது: அன்புமணி ராமதாஸ் ..

தமிழகம் உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (செப். 22) தன் ட்விட்டர் பக்கத்தில், “நீட் சமூக நீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி.
இந்தியாவில் நீட் தேர்வைத் திணித்த காங்கிரஸ் கட்சியினரே அதன் தீமைகளை உணரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்து. நல்ல திருப்பம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசத் தொடங்கப் போகிறது என்பதையே மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காட்டுகிறது!

நீட் மிகப்பெரிய சமூக அநீதி… அது ஒரு மாணவர் கொல்லி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த உண்மையை மத்திய அரசு உணர வேண்டும். தமிழகம் உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.