தமிழகம் முழுவதும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : அலைமோதும் பக்தர்கள் ..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

தமிழகத்தில் கோயில்கள்,வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோவில்களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை 6.30 மணியில் இருந்து பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இன்று காலை கோவில் திறக்கப்படுவதை தொடர்ந்து நேற்று கோவிலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இன்று காலை பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 6 மாதங்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் பக்தி பரசவம் அடைந்தனர்.

மேலும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் மூலவரை தரிசனம் செய்து பின்னர் அம்மன் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர். இதற்கான கூண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் அமர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பக்தர்கள் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

சமூக இடைவெளியை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக கோவிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது.

கோவிலில் நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதுதவிர தமிழக அரசு தெரிவிக்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.