அமுமக கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் : டிடிவி தினகரன் பேட்டி..

அதிமுக கட்சி விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. அதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு முதலமைச்சர் பதவியை பறிகொடுத்தார் ஓ. பன்னீர்செல்வம்.

பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதை தொடர்ந்து ஒ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சுயேட்சையாக நின்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் தினகரன். அதை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தின் அதிமுக அரசுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வரும் டி.டி.வி தினகரன், மீண்டும் அதிமுக கட்சியை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறார்.

அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகச் செயல்பட தன்னுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாகக் கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் பேசிய டிடிவி. தினகரன், அதிமுக கட்சி விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக்கத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதனடிப்படையில், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு இடையே அவர் சச்சரவுகளை உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில் கொள்கை முடிவுகளில் மாறுதல் வருமா என அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.