முக்கிய செய்திகள்

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: ஸ்டாலின்..

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5-ம் தேடி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் அனைத்துத் தரப்பினரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (01-04-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

ஸ்டாலின்: காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களோடு கலந்து பேசியிருக்கிறோம். இதில் மிக முக்கியமானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதன் சாராம்சம் என்னவென்றால், வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும்

மிகப்பெரிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளின் தலைவர்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதேபோல, வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அத்துனை பேரும் அந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதுமட்டுமல்ல, வணிகர் சங்கத்தின் சார்பில் 3 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் என ஏற்கனவே விக்கிரமராஜா அறிவித்திருக்கிறார். அவரை நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 3 ஆம் தேதி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் காரணத்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அனைத்து கட்சிகளின் சார்பில் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சார்பில் நான் கேட்டுக் கொண்டேன். எங்களுடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்து இருக்கிறார். எனவே, எல்லா தரப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்தகட்டமாக, காவிரி டெல்டா பகுதியில் இருந்து, காவிரி உரிமை மீட்பு குறித்த விழிப்புணர்வு பயணமாக, அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு மிகப்பெரிய பயணத்தை நடத்தவிருக்கிறோம். அதுகுறித்து மீண்டும் நாங்கள் கலந்துபேசி விரைவில் அறிவிப்போம். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு பிரதமர் அவர்கள் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்கள் யார் வந்தாலும் கறுப்பு கொடி காட்டுவதென முடிவெடுத்து இருக்கிறோம். எனவே, இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற தீர்மானங்களுக்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும்.

செய்தியாளர்கள்: அரசியல் கட்சிகள், மாணவர்கள், விவசாயிகள் எல்லாம் போராட்டத்தில் இருக்கும்போது, 70 ஆம் பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடுகிறார்களே?

ஸ்டாலின்: இதையெல்லாம் கண்டிக்கின்ற வகையிலும், மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும் நாங்கள் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறோம்.

செய்தியாளர்: தமிழக தலைமைச் செயலாளர், அட்டர்னி ஜெனரல் ஆகியோர் இன்று தன்னை சந்திக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்து இருக்கிறாரே?

ஸ்டாலின்: தமிழகத்தில் கவர்னர் தனியாக ஒரு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கவர்னர் தலைமையில் ஒரு ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி என இங்கு இரட்டை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

செய்தியாளர்கள்: போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா?

ஸ்டாலின்: எல்லா அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். முடிந்தால், அதிமுகவுக்கும் அழைப்பு விடுப்போம்.

செய்தியாளர்: இன்று பொதுமக்கள், மாணவர்கள் எல்லாம் போராட்டம் செய்து வருகிறார்களே?

ஸ்டாலின்: தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் 5 ஆம் தேதி நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.