அயோத்தி மத்தியஸ்த குழு: மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்..

அயோத்தி வழக்கில் தீர்வு காண உச்ச நீதிமன்றம் இன்று நியமித்துள்ள மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவில்,

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுவர்.

மத்தியஸ்தர்கள் நடவடிக்கை அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பான எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது’’ என தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் இன்று நியமித்துள்ள மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இப்ராஹிம் கலிபுல்லா:

மத்தியஸ்த குழுவின் தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் கலிபுல்லா தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு நல்ல முடிவுகளை எட்டியவர்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்:

வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தமிழகத்தின் கும்பகோணத்தை சேர்ந்தவர். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நீண்டகாலமாகவே அயோத்தி வழக்கில் அதிகாரபூர்வமற்ற வகையில் மத்தியஸ் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சன்னி மற்றும் ஷியா வக்பு வாரியங்களை சேர்ந்தவர்கள், ராமஜென்மபூமி அமைப்பினர் என பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஸ்ரீராம் பஞ்சு:

மூன்றாவது உறுப்பினரான வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சென்னையைச் சேர்ந்தவர். பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவிடும் வகையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட அனுபவம் கொண்டவர்.

மூத்த வழக்கறிஞரான அவர், நீதி மற்றும் சட்ட விஷயங்களுடன் மத்தியஸ்த பேச்சுவார்த்தையை அணுகுவதில் திறமையானவர் என பெயர் பெற்றவர். மத்தியஸ்தம் தொடர்பான 2 புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். பல ஆண்டுளாக மத்தியஸ்தம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவி வருகிறார்.