நாளை பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் : இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு..

நாடுமுழுவதும் சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை காலை தொடங்கும் கூட்டம் பிற்பகல் வரை நடக்கும் எனத் தெரிகிறது. பிரதமர் மோடி கூட்டத்தின் முடிவில் பேசுவார் எனத் தெரிகிறது.
கரோனா விதிகளைப் பின்பற்றி தேசிய செயற்குழுக் கூட்டம் நடக்க இருப்பதால், டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், காணொலி வாயிலாகப் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 15 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. ஒரு மக்களவைத் தொகுதியிலும் தோல்வி அடைந்தது. குறிப்பாக மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் தோல்வி குறித்து தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில், “இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் விரைவில் ஆய்வு செய்வோம். மக்கள் ஏன் இவ்வாறு தீர்ப்பளித்தார்கள் எனத் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். 2022-ம் ஆண்டு நடக்கும் தேர்தலுக்குள் பாஜகவின் நிலையை மேம்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், தேர்தல் தோல்விக்கான எந்தவிதமான குறிப்பிட்ட காரணத்தையும் அனுராக் தாக்கூர் குறிப்பிடவில்லை.

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “விலைவாசி உயர்வுதான் மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆனால், இதுதான் தோல்விக்கான காரணம் என உடனடியாகத் தெரிவிக்க இயலாது. அசாமில் 5 இடங்களிலும் பாஜக வென்றுள்ளது. மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் பாஜக வென்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், தொகுதியிலும் இருக்கும் பிரச்சினைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்.