பாஜகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின் : டிடிவி தினகரன்..


திமுகவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜகவை விமர்சித்து பேசியதாக அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கலைஞா் கருணாநிதி மறைவைத் தொடா்ந்து, தி.மு.க.வின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலினை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, “மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளார். கருணாநிதி இருக்கும்போதே, திமுகவின் அடுத்தத் தலைவராக அறியப்பட்டவர் மு.க.ஸ்டாலின்.

இப்போது,  ஏதோ புதிதாக அரசியலுக்கு வந்தது போல், திருடர்கள் ஆட்சி, பகல் கொள்ளை நடக்கும் ஆட்சி என்றெல்லாம் கூறுகிறார்.
மு.க.ஸ்டாலின் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த டி.ஆர்.பாலுவுடன் டெல்லி சென்றபோது, நீண்ட நேரம் காத்திருந்து அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது, அமித் ஷா கருணாநிதியின் புகழஞ்சலிக்கு வருவதாக கூறிவிட்டு, வேறொருவரை அனுப்பியுள்ளதால், தமிழகத்தில் காவி வண்ணம் அடிக்க விடமாட்டோம் என கோபத்தில் பேசியுள்ளார்.

கூட்டணி அமைக்க முயன்று, அது முடியாமல் போன விரக்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.