காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் : பிப்.14-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் ..

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்.14-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மக்களின் பல ஆண்டு கால கனவு திட்டத்தை பிரதமர், முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் எனவும் கூறினார்.

மதயாணிப்பட்டியில் அணை கட்டும் பணியை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி, நிதி கோருவது தொடர்பாக டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை சீரமைப்பு, பவானி ஆற்றை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.

சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அவர், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.