காவிரி விவகாரம் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்


உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுத் திட்டம் குறித்து விவாதிக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்ட ரீதியாக செயல்படுத்துவது குறித்து வலியுறுத்தவும் நாளை அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வந்த மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்திருக்கிறது. நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்டனங்களிலிருந்து தப்பிக்கின்ற வகையில், தனது வரைவுத் திட்ட விவரங்களை சமர்ப்பித்திருக்கும் மத்திய அரசு, அதனை முழுமையாக எப்போது நடைமுறைப்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களும் – காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட மத்திய பாஜக அரசு, வாரியத்திற்குப் பதிலாக ஆணையம், குழு என்றெல்லாம் மாற்றுவழிகள் கொண்ட பெயர்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் தக்க பதிலளித்து, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை, மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு முன்வைக்கின்ற திட்டங்களையெல்லாம் வரவேற்கும் அதிமுக அரசு, காவிரி உரிமை விவகாரத்திலும் தொடர்ந்து இதேபோக்கில் செயல்படாமல், மே 16-ம் தேதி நடைபெறும் விசாரணையில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற டெல்டா விவசாயிகள், மத்திய அரசின் வரைவுத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், அந்த வரைவுத் திட்டத்துக்கு ஆதரவாக டெல்லியில் கருத்து தெரிவித்த தமிழக சட்ட அமைச்சரின் அறியாமையையும் எள்ளி நகையாடுகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு, இனியும் கால அவகாசம் வழங்காமல், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க ஆவன செய்யவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கடைசிகட்ட எதிர்பார்ப்பாகும்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் அமைப்பான நடுவர் மன்றம் அமைய, அயராது பாடுபட்டு வெற்றிகண்ட தலைவர் கருணாநிதியின் வழியில் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அம்சங்களை செயல்படுத்துவதற்கு, திமுக தொடர்ந்து செயல்படும். காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம்தராமல், தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு செயல்படும் வகையில், மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்யவும், சட்டரீதியாக அதனை செயல்படுத்தவும், அதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலத்தின் சார்பில் வலியுறுத்தவும், நாளையே (மே 15) தமிழகத்தின் அனைத்து கட்சிகள் – அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டத்தை அதிமுக அரசு கூட்ட வேண்டும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.