காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..

கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கேஆர்பி அணைகளில் இருந்து அதிக அளவு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியதை அடுத்து, அணைக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந் துள்ளதால், அணையின் நீர்வரத்து 19,000 கனஅடியில் இருந்து 32,421 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின்  நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி வரை அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.05 அடியாகவும், நீர்இருப்பு 14.83 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 500 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே சமயம் கர்நாடகாவில் மழை குறைந்ததால் தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு 30,000 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக குறைந்துள்ளது.இருப்பினும் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை 2வது நாளாக தொடர்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.